மீதொட்டமுல்ல அனர்த்தம் – பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு

321 0

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின் போதே மேலும் ஒரு உடலம் மீட்கப்பட்டதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொஷன் செனவிரத்ன தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களுள் 6 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மூவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் ஒருவர் அவசர கிசிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அனர்த்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

தற்போதும் அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் மீட்புப் பணிகள் இடம்பெற்றுகின்ற நிலையில் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அகழ்வு இயந்திரங்கள் 12, டிப்பர் வாகனங்கள் 15தும்; பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குப்பை மேடு சரிவு காரணமாக பாதிப்புக்கு உள்ளான சொத்து விபரங்களை மதிப்பிடும் பணிகள் இன்று முதல் இடம்பெறுவதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கொழும்பு மாவட்ட செயலகம் மற்றும் கொலன்னாவ பிரதேச பொதுச்செயலக காரியாலய அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அபாய பகுதிகளில் வாழும் மக்களை இனங்கண்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.