பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர

208 0

தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை வெட்டித் தள்ளும் வேலையில் ரணில் முனைப்பாக உள்ளார். வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டும் தமது எண்ணத்தை நிறைவேற்ற சஜித் ஆவலுடன் காத்திருக்கிறார். அனுர குமாரவின் மொழிக் கொள்கை என்ன என்பதற்கு கனடாக் கூட்டத்தில் கூறப்பட்ட ஷஎலியட்ட தாண்ட| பதில் போதும். இவைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஒரே தீர்வு தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதுதான் என்றால் தவறிருக்காது! 

இந்த வருடத்தில் நடைபெற்றேயாக வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமா, இடம்பெறாதா, ஒரேயடியாக பின்தள்ளப்பட்டுப் போகுமா என்ற கேள்விகள் அரசியல் கட்சிகளிடையே தொடர்ந்து நிலவி வருகிறது.

இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று, வருகின்ற அக்டோபர் மாத முதலாவது சனிக்கிழமை (5ம் திகதி) தேர்தல் நடைபெறுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு எத்தனை அவுன்ஸ் நம்பகத்தன்மை கொண்டதென்ற அடுத்த கேள்வி இப்போது முனைப்புப் பெற்று நிற்கிறது. இதற்கான முதற்காரணம், ரணிலை ஜனாதிபதி அரியாசனத்திலேற்றி இன்றுவரை இறக்காமல் பாதுகாத்து வருகின்ற பொதுஜன பெரமுன நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென அடாப்பிடியாக நிற்பதே.

இந்தக் கோரிக்கையை ரணிலிடம் நேரடியாக முன்வைத்தவர் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச. எதற்குமே நேரடியாகப் பதிலளிக்காது அலைக்கழித்து வரும் ரணில், ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் கட்டாயம் நடத்தப்பட வேண்டியது என்று மட்டும் நாசூக்காக பதிலளித்துவிட்டு, தேர்தலுக்கான அக்டோபர் 5ம் திகதியை வெளியிட்டார்.

ரணிலிடம் தமது பருப்பு அவியாது என்பதைப் புரிந்து கொண்ட பசில், அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன செயற்குழுக் கூட்டத்தில் – நான் பொதுத்தேர்தலை முதலில் நடத்துமாறு ரணிலிடம் கோரினேன். அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே அவரது விருப்பம்போல் செயற்படுமாறு கூறினேன் என்று தமது இன்றைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

இதனாலோ என்னவோ பெரமுனவின் தேசிய அமைப்பாளராக ஷகுட்டி ராசா| நாமல் ராஜபக்சவை கட்சி நியமித்துள்ளது. நாமலை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டுமென விடாப்பிடியாக கேட்டு வரும் கட்சியின் ஓர் அணியினருக்கு இது வாய்ப்பாகப் போயிற்று. இவர்கள் தொடர்ந்து அந்த வாய்ப்பாட்டையே வாசித்து வருகின்றனர்.

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க – சிறிமாவோ பண்டாரநாயக்க தம்பதியினரின் ஏகபுதல்வரான அனுர பண்டாரநாயக்கவும் இன்றைய நாமல் ராஜபக்ச போன்று உயர்மட்டத்தில் வைத்துப் பார்க்கப்பட்டவர். தமது பெற்றோர் அமர்ந்த ஆசனத்தில் (அப்போது பிரதமர் பதவி) தாமும் ஏற வேண்டுமென துடியாய்த் துடித்தவர் அனுர பண்டாரநாயக்க. ஒரு கட்டத்தில் தமது தந்தை உருவாக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சபாநாயகர் பதவியைப் பெற்றவர்.

பொறுமை காத்து அவர் அரசியல் செய்திருந்தால் அவரது சகோதரி சந்திரிகா குமாரதுங்க பெற்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதிப் பதவிகள் அவருக்கே கிடைத்திருக்க வேண்டியவை. ஷவெள்ளை மாடு கொழுத்தாலும் வழுவழுப்பு நீங்காது| என்பது போல அனுர பண்டாரநாயக்க பெயரளவில் குடும்ப வாரிசாக உயர்ந்திருந்தாலும் அரசியல் செயற்பாட்டிலும் அந்த நிலைக்கு வளர்ந்திராததால் எல்லாமே பொரிமாத்தோண்டி கதையானது வரலாறு.

இந்த அரிச்சுவட்டிலேயே நாமலும் இன்று நடைபயில்கிறார். ரணிலும் நாமலும் மலையும் மடுவும் போன்றவர்கள். இதனை நன்கு புரிந்து கொண்டதால்தான் நாமல் இப்போது ஜனாதிபதிப் போட்டியில் இறங்குவதை அவரது தந்தை மகிந்த விரும்பவில்லை. இன்னுமொரு ஐந்து ஆண்டுகள் ஷநம்மடை ஆள்| ரணில் ஜனாதிபதியாக இருப்பாரானால், அடுத்து வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் வயதாலும் அனுபவத்தாலும் தகுதி பெற்றுவிடுவாரென்று மகிந்த கருதுகிறார்.

ஏறத்தாழ பசிலும் இப்போது அந்த நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார். அதனாற்தான், நெருக்கடியான நேரத்தில் ஆட்சியை பொறுப்பேற்ற ரணில்; பொருளாதார ரீதியாக நாட்டைக் காப்பாற்றி (தங்களையும் காப்பாற்றினாரென பகிரங்கமாகக் குறிப்பிடாமல்) மக்களுக்கு பசி நீக்குகிறார் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார்.

பசில் இவ்வாறான முடிவெடுத்ததற்கு மூன்று காரணங்கள் உண்டு. 1. ரணிலுக்கெதிராக பெரமுன ஒருவரை களமிறக்கினால் ஏற்கனவே அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்களாக இருப்பவர்கள் ரணிலின் பக்கம் செல்வர். இதனால் பெரமுன பிளவடையும். 2. எக்காரணம் கொண்டும் ஜே.வி.பி. வேட்பாளர் அனுர குமார வெற்றி பெறுவதை அனுமதிக்கக்கூடாது. 3. சஜித் பிரேமதாசவின் எதிர்காலத்தை சூனியமாக்கி அரசிலிருந்து அப்புறப்படுத்த ஒரேவழி ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே.

ஆக, இன்றைய களநிலைவரப்படி ஆட்சித் தரப்பின் ஆதரவோடு ரணில் ஜனாதிபதி வேட்பாளராகிறார் என்பது நம்பக்கூடிய நிச்சயமாகிறது.

எனினும், ரணில் தொடர்ந்து பெரமுன, சஜித் அணி ஆகியவற்றை பிய்த்தெறியும் கைங்கரியங்களிலேயே ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் நாடு முழுவதும் சென்று தேர்தல்; அட்வான்ஸ் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். அதிகாரபூர்வமாக வெசாக் தினத்தின் பின்னரேயே தேர்தல் பிரசாரம் ஆரம்பமாகுமெனை அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17க்கும் அக்டோபர் 17க்குமிடையில் நடைபெறுமென்று நம்ப வைக்கும் அறிவிப்புகளையும் விடுத்து வருகின்றார்.

கடந்த ஒருவாரத்தில் பருத்தித்துறை, றாகம மருத்துவமனைகளில் புதிய கட்டிடங்களை கையளித்தது, நாட்டின் மிகப்பெரிய மகப்பேற்று மருத்துவமiiயை காலியில் திறந்து வைத்தது, அரச ஊழியர்களுக்கு ஏப்ரலில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு, ஓய்வூதியகாரர்களுக்கு ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வு, பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு என பல நிகழ்ச்சிகளில் ரணில் நேரடியாக பங்கேற்று வருவதானது, ‘ஐயா லெக்~ன் கேட்கிறார்” என்ற பிரபல நாடகத்தை நினைவூட்டுகிறது.

இப்படியான சாதக சமிக்ஞைகள் காணப்படும் அதேசமயம், தேர்தலுக்குப் பொறுப்பான தேர்தல் ஆணையாளர் இரண்டு விடயங்களை அறிவித்து அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் இவ்வருடத்தில் நடத்தக்கூடிய வலுவுடன் தேர்தல் திணைக்களம் இருப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டம்பர் 18ம் திகதி நடத்தினால் நல்லது எனவும் இவர் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் திணைக்களம்தான் தேர்தல்களை நடத்தினாலும் ஆட்சித்தரப்பில் ஜனாதிபதி தமக்கான சகல நிறைவேற்று அதிகாரங்களையும் பயன்படுத்தி முடிவெடுப்பார் என்பதே யதார்த்தம்.

கடந்த வருடம் உள்;ராட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுத்த தேர்தல் திணைக்களம் அதற்கான திகதி அறிவித்து, அபேட்சகர் கட்டுப்பணம் செலுத்தி வாக்குச் சீட்டுகளையும் அச்சடித்துக் கொண்டிருந்த வேளையில் – தேர்தலுக்குப் பொறுப்பு தேர்தல் ஆணையாளர், வாக்குப் பெட்டி ஜனாதிபதியின் கைகளில் – என்ற தலைப்பில் இந்தப் பத்தியில் எழுதப்பட்டது ஞாபகம் இருக்கிறது. அச்சொட்டாக அவ்வாறே தேர்தல் ரத்தானது. இன்றுவரை தேர்தல் நடைபெறவில்லை. இதனை அரசியல் கட்சிகளும் மறந்தேவிட்டனர்.

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசநாயக்க, சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடுவது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. மேலும் ஐந்தோ பத்துப்பேர் போட்டியிடக்கூடும்.

தாம் அமைச்சராக இருந்தபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசினால் ராஜிவ் அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தால் உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இருக்குமென கூறிவரும் அவரது ஆட்சியிலேயே அந்த அதிகாரங்களை மத்திய அரசு பயன்படுத்தி தமிழர் பிரதேச காணிகளும் வழிபாட்டுக்குரிய நிலங்களும் அபகரிக்கப்படுகின்றன.

வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டுவேனென்று தெரிவித்த சஜித் பிரேமதாசவிடம் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜே.வி.பி. வேட்பாளர் அனுர குமார திசநாயக்க புனித கங்கையில் நீராடி புனிதமான மனிதராக காட்சி கொடுக்க முனைகிறார். தமிழர் வாக்குகளை இலக்கு வைத்து அண்மையில் வடக்கே சென்ற இவர் கிழக்குக்கும் செல்லப் போகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இம்மாத நடுப்பகுதியில் கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்ற ரொறன்ரோ கூட்டத்தில் சுமார் இருநூறு வரையான தமிழர்களும் பங்குபற்றினர். இமாலய பிரகடனத்தினால் சிக்கலுக்குள்ளாகியிருக்கும் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளும் இங்கே காணப்பட்டனர்.

அனுர குமார திசநாயக்க தமது தாய்மொழியான சிங்களத்தில் உரையாற்றினார். இதனை தமிழில் கேட்க அதற்கான செயலி வழங்கப்பட்டது. சில நிமிடங்களில் அது இயங்காமல் போயிற்று. ‘தமிழில் மொழிபெயர்ப்புத் தாருங்கள்” என தமிழர் ஒருவர் வேண்டினார். மேடையிலிருந்த பிரமுகர் ஒருவரிடமிருந்து ‘எலியட்ட தாண்ட” எனப் பதில் வந்தது. இதன் அர்த்தம் வெளியே போ என்பது.

தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை வெட்டித் தள்ளும் வேலையில் ரணில் முனைப்பாக உள்ளார். வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டும் தமது எண்ணத்தை நிறைவேற்ற சஜித் ஆவலுடன் காத்திருக்கிறார். அனுர குமாரவின் மொழிக் கொள்கை என்ன என்பதற்கு கனடாக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பதில் போதும்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், இவைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஒரே தீர்வு தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதுதான் என்றால் தவறிருக்காது!

பனங்காட்டான்