75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…

260 0

Back to square one (மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்குவது) என்று ஆங்கிலப் பதம் ஒன்றுண்டு. அதாவது, எந்த முன்னேற்றமும் காணப்படாதவிடத்து மீண்டும் தொடக்கப் புள்ளிக்கு திரும்புவது என்பது இதன் அர்த்தம். எழுபத்தைந்தாவது ஆண்டில் தமிழரசுக் கட்சி மீண்டும் தொடக்கப் புள்ளிக்கு இழுத்துச் செல்லப்படுகிறது. வீடுக்கு விடிவு வரவேண்டுமென்றால் அதற்குள் வாசம் செய்பவர்கள் பதவி மோகம் துறக்க வேண்டும். 

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்குமோ இல்லையோ, தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே இன்று முக்கியமாகியுள்ளது.

தமிழரசுக் கட்சிக்குள் பிரச்சனையென ஒன்றுமில்லையென்று கூறிய கட்சியின் உறுப்பினரான எனது நண்பர் ஒருவர், எல்லாம் சிறீதரன் தலைவராக வெற்றி பெற்றதால்தான் ஏற்பட்டது என்று வெகு சிம்பிளாகக் கூறினார். அவர் கூறியதன் அர்த்தம், குகதாசன் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டதை காரணமாக்கி சிறீதரனை பதம் பார்த்ததானது என்பதாகும்.

எழுபத்தைந்து வருட வரலாற்றில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவமானமாக இன்றைய நிலைமையை கட்சி ஆதரவாளர்கள் மட்டுமன்றி பொதுமக்களில் பெரும்பாலானோரும் பார்க்கின்றனர். கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பாக (எம்.பிக்களின் எண்ணிக்கையில்) மாறியிருந்தாலும், தமிழர்களின் அடையாளமாகவே பொதுவெளியில் பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க புதிதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்து குறுகிய காலத்தில் ஆட்சிக்கு வந்ததுபோல, ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலானவர்கள் தமிழரசுக் கட்சியை உருவாக்கி அதனை விரைவாக தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாக மாற்றினார்கள்.

ஆனால், இன்று பதவிப் பித்து பிடித்தவர்களின் செயற்பாடுகளால் கட்சி அலங்கோலப்படுகிறது என்றால், அது அதன் நிர்வாகத்தை கேள்விக்குறியாக்குகிறது என்பதே அர்த்தம்.

கட்சியின் தலைவர் தெரிவும், செயலாளர் உட்பட நிர்வாகிகள் தெரிவும் முறையே கடந்த ஜனவரி 21ம் 27ம் திகதிகளில் இடம்பெற்றன. அன்றிலிருந்து நொண்டி நிலைக்குப் போன கட்சி அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு இப்போது நீதிமன்றத் தீர்ப்பின் முன்னால் காத்து நிற்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மேற்சொன்ன பதவிகளுக்கான தெரிவுகள் தொடர்பான ஒரு வழக்கு திருமலை நீதிமன்றிலும், மற்றொன்று யாழ்ப்பாண நீதிமன்றிலும் விசாரணையில் உள்ளன. வழக்குத் தொடுநர்கள் வேற்றினத்தவர்கள் அல்ல, வேற்றுக் கட்சியினரும் அல்ல. எல்லோருமே வீட்டுக் கட்சியினர்தான்.

பத்து வருடங்களுக்கு மேலாக கட்சியின் தலைவராக இருந்துவந்த மாவை சேனாதிராஜா, புதிதாகத் தலைவராகத் தெரிவாகியும் பதவியேற்புநிகழ்த்தாதுபோன சிவஞானம் சிறீதரன், தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.ஏ.சுமந்திரன் உட்பட ஏழு பேர் மீது திருமலை வழக்கு தாக்கலாகியிருந்தது.

நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னர் சுமுகமாக இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் இம்முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கட்சியின் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

‘தமிழரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சுமுகமான தீர்வைக் காண்போம்” என அவர் தெரிவித்த அறிவிப்பு பல ஊடகங்களிலும் முதன்மைச் செய்தியாக வந்தது. கட்சித் தலைவரின் பொறுப்பு, செயலாளரின் கடமை என்பவைகளையும் அவர் விபரமாக விளக்கியிருந்தார்.

நீதிமன்ற விசாரணைகள் நடைபெறுவதற்கு முன்னராக ஏதோ ஒரு வகையில் சுமுகமான தீர்வு காணப்பட்டு ஒற்றுமை வெளிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்ததை அவரின் கூற்றினூடாக உணர முடிந்தது. ”சுமுகத் தீர்வு” என்று அவர் குறிப்பிட்ட வார்த்தை, ஏற்கனவே இடம்பெற்ற தெரிவுகள் மாற்றமின்றி சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக எடுக்கப்படும் முடிவு அமையும் என்பதையே சுட்டி நின்றது.

ஆனால், இதுவரை அவ்வாறு எதுவும் அமையவில்லை. கட்சியின் தலைமை உட்பட சகல தெரிவுகளும் கட்சியின் யாப்பை மீறியுள்ளன என்றும், யாப்பின் பிரகாரம் அனைத்துப் பதவிகளையும் மீளத் தெரிவதற்கு கட்சி தயாராக இருப்பதாக சட்டவாளர் தவராசா வழக்கு விசாரணையில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் பெயரிடப்பட்ட ஏழு பேரில் ஒருவரான சுமந்திரன் அன்று நீதிமன்றில் சமூகமளிக்க முடியாதிருந்ததால் அவரது நிலைப்பாட்டை அறிவதற்காக வழக்கு அடுத்த மாதம் ஐந்தாம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது. சுமந்திரன் ஒரு சட்டவாளராக இருப்பதால் அவரே தமக்காக ஆஜராகுவாரென்று எதிர்பார்க்கலாம்.

சகல பதவிகளையும் மீளத் தெரிவு செய்வதென்பதை சுமந்திரன் ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால், சகல பதவிகளையும் மீளத்தெரிவதற்கு தயார் என்று மற்றையோர் தரப்பில் ஆஜரான சட்டவாளர் ஊடாக தெரிவிக்கப்பட்டதானது, சிவஞானம் சிறீதரன் மீண்டும்  தலைவர் பதவிக்கு தெரிவாகுவாரென்ற நம்பிக்கையின் அடிப்படையிலானது என்று ஊகிக்க இடமுண்டு.

வழக்கு விசாரணையின் இறுதித் தீர்ப்பு வழங்கி மீண்டும் புதிய தெரிவுகள் இடம்பெறும்வரை, கடந்த பத்து வருடங்களாக கட்சியின் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜாவே தொடர்ந்து கட்சியின் தலைவராக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பதவி ஆசை கொண்ட இவர் யாப்பு முறைப்படி செயற்படாததே இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணமென கூறப்படுகிறது. தலைவர் சரியாக செயற்படவில்லையென்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஒரு கூட்டுப் பொறுப்பாகவே பார்த்து அதன் பொறுப்பை சகல நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை ஏனோ எவரும் பார்க்க விரும்பவில்லை.

முக்கியமாக கட்சியின் மூத்த துணைத்தலைவர், உபதலைவர்கள், செயலாளர் அல்லது பதில் செயலாளர், பொருளாளர் என்று நிர்வாகத்திலுள்ள சகலரும் இதன் கூட்டுப்பொறுப்பை ஏற்க வேண்டும். கட்சியின் மூத்த தலைவர், பெருந்தலைவர் என்ற மகுடங்களைச் சுமந்து கொண்டு கடும் தியானத்தில் இருக்கும் சம்பந்தனும் இதற்கான கூட்டுப்பொறுப்பை சுமக்க வேண்டியவர்களுள் ஒருவர்.

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிரானது. இந்த வழக்கை சுருக்கமாக முடிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பது என்பதே இரண்டு தரப்பினதும் பொதுவான நிலைப்பாடாக இருந்ததாக நீதிமன்றத்தில் ஆஜரான கட்சியின் சட்டவாளர் என்.சிறீகாந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எனினும், சட்டவிதிகளுக்கு உடன்பட்டதாக மறுமொழி தாக்கல் செய்வதற்கு திகதி குறிப்பிடுமாறு தாம் கேட்டதாகவும், இந்த அடிப்படையில் வழக்கை ஏப்ரல் 25ம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இரண்டு வழக்குகளின் விசாரணை அடிப்படையில் தேசிய மாநாட்டுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை மேலும் இரண்டு மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இடைக்காலம் என்பது ஓர் இடர்காலமாகவே கட்சிக்கு இருக்குமென்று இப்பத்தியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.

நீதிமன்றங்களின் இறுதித் தீர்ப்பின் பின்னரே புதிய தெரிவுகள் இடம்பெறும்போது  மீண்டும் நெருக்கடியான காலமொன்று உருவாகலாம். புதிய தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகளைத் தெரிவு செய்யும்போது ஊர்மட்டக் கிளைகளில்கூட பெரும் போட்டிகளையும் வாதங்களையும் சந்திக்க வேண்டி வரும்.

அவ்வாறான நெருக்கடி வராமல் தடுப்பதற்கு கட்சியின் மூத்தவர்களும் முக்கியஸ்தர்களும் பக்கம் சாராது செயற்பட வேண்டும். கட்சியின் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு இவ்வேளையில் பெரும் பொறுப்பு ஏற்படும். அல்லது அவராக அப்பொறுப்பை ஏற்கவேண்டி வரும்.

தமிழரசின் நெருக்கடிக்கு சுமுக தீர்வு காண்போமென்ற தமது அறைகூவலை செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அவரைச் சார்ந்தது. சிறீதரனும் சுமந்திரனும் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டபோது சுமந்திரனின் பெயருக்கு ஆதரவாக முதலில் ஒப்பமிட்டவர் இவர். ஆனால், கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா இருவரில் எவரையுமே ஆதரித்து ஒப்பமிடவில்லை.

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சிறீதரன் மாவை சேனாதிராஜாவைச் சந்தித்து  தம்மை ஆதரித்து ஒப்பமிடுமாறு கேட்டபோது, கட்சியின் தலைவராக தாம் இருப்பதால் ஒரு வேட்பாளரை ஆதரித்து ஒப்பமிடுவது சரியன்று எனக்கூறி தவிர்த்துக் கொண்டார். இதனை தொலைக்காட்சி செவ்வியொன்றில் சிறீதரனே அப்போது தெரிவித்திருந்தார். ஆனால், மூத்த துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஒருபக்கம் சார்ந்து செயற்பட்டதால் நெருக்கடி நிலையின்போது அதனை தீர்த்து வைக்கும் வாய்ப்பை இழந்தவரானார்.

திரு.சி.வி.கே.சிவஞானம் பன்முக ஆளுமை கொண்ட செயற்பாட்டாளர். இலங்கை உள்;ராட்சிச் சேவையில் பல வருடங்கள் பணியாற்றியவர். மாநகரசபை ஆணையாளராகவும், விசேட ஆணையாளராகவும் நீண்ட காலம்  கடமையாற்றியவர். நெருக்கடி காலத்தில் பல பொது அமைப்புகளின் தலைமைப் பதவியை ஏற்று சிறப்புற நடத்தியவர். 1987ம் ஆண்டு வடக்கும் கிழக்கும் இணைந்த இடைக்கால சபையின் தலைவர் பதவிக்கு விடுதலைப் புலிகளால் பரிந்துரை செய்யப்பட்டு நியமனமானவர். போர்க்காலத்தில் மண்ணில் நின்று மகத்தான சேவை புரிந்தவர். தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு எல்லா வகையிலும் தகுதியான இவர் அதை விரும்பாததால் ஏற்பட்ட எதிர்பாராத சூழலே சிறீதரனும் சுமந்திரனும் போட்டியிடவும், இவர் ஒருபக்கம் சாயவும் வேண்டிய சூழலை ஏற்படுத்தியது.

‘இனிமேல் கட்சியில் எந்தப் பதவிக்கும் போட்டி இருக்குமானால் அதில் நான் பங்குகொள்ள மாட்டேன்” என்று திரு. சிவஞானம் கடந்த மாதம் ஊடகர்கள் சந்திப்பில் தெரிவித்ததானது, முன்னைய தேர்தலில் அவர் பெற்றுக்கொண்ட பட்டறிவாக இருக்கலாம்.

‘கட்சியின் தலைவர் உள்ளிட்ட சகல பதவிகளுக்குமான தெரிவு போட்டி மூலம் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்” என்ற இவரது விருப்பமான கூற்றின்படி, நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் பின்னர் தெரிவு மீள இடம்பெறுமாயின் அதனை நடைமுறைப்படுத்துவதில் இவரது பங்களிப்பு மேற்கூறிய கூற்றின் வயப்பட்டதாக இருக்க வேண்டுமென்பது பலரதும் விருப்பம்.

தமிழரசுக் கட்சி அதன் எழுபத்தைந்தாவது ஆண்டில் முன்னர் எப்போதும் சந்தித்திராத நெருக்கடிக்குள் சிக்கி நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்நோக்கி நிற்கிறது. அந்தத் தீர்ப்புக்கு முன்னராகவே கட்சி எடுத்துள்ள முடிவு சகல தெரிவுகளையும் மீள நடத்துவது என்பது. இது நீதிமன்றத்துக்கும் அறிவிக்கப்பட்டாகி விட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பு இதனை ஒட்டியதாக அமையுமாயின் இன்னொரு உள்வீட்டுத் தேர்தலை கட்சி எதிர்நோக்கும்.

Back to square one (மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்குவது) என்று ஆங்கிலப் பதம் ஒன்றுண்டு. அதாவது எந்த முன்னேற்றமும் காணப்படாதவிடத்து மீண்டும் தொடக்கப் புள்ளிக்கு திரும்புவது என்பது இதன் அர்த்தம். எழுபத்தைந்தாவது ஆண்டில் தமிழரசுக் கட்சி மீண்டும் தொடக்கப் புள்ளிக்கு இழுத்துச் செல்லப்படுகிறது. வீடுக்கு விடிவு வரவேண்டுமென்றால் அதற்குள் வாசம் செய்பவர்கள் பதவி மோகம் துறக்க வேண்டும்.

பனங்காட்டான்