தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!

71 0

இந்திய அமைதிப் படையின் அடாவடிக்கெதிராக தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் வழியில் உண்ணாவிரதம் இருந்து தன்னை ஆகுதியாக்கியவர் அன்னை பூபதி.

மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர்தான் அன்னை பூபதி. 3.11.1932 அன்று மட்டக்களப்பில் பிறந்த இவர் தனது 56ஆவது வயதில் உண்ணாநிலை தியாகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

1987ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை தமிழ் மக்களை ஒரு மிருகம் போல் வேட்டையாடிக்கொண்டிருந்தது. தமிழர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று குவித்துக்கொண்டிருந்தது. தமிழர்களைக் காக்க ஆயுதமேந்தி போராடிக்கொண்டிருந்தனர்விடுதலைப் புலிகள்.

இவ்வாறு விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான், இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப்போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் அணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து சிங்கள பேரினவாத அரசுக்கெதிராகவும் இந்திய அமைதிப் படைக்கு எதிராகவும் உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கினர். அந்த கோரிக்கைகள்:

1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து 19.3.1988ம் ஆண்டு மட்டக்களப்பில் உள்ள பிள்ளையார் கோவிலில் சாகும்வரையிலான உண்ணாநிலை போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். ஆனால் அகிம்சை போராட்டத்தால் விடுதலை பெற்றதாக சொல்லும் இந்திய ஒன்றியம், அன்னை பூபதியின் அகிம்சைவழி போராட்டத்தை அலட்சியமே செய்தது.

போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்தியப் படை அதிகாரிகளுடன் அன்னையர் முன்னணி பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை தெரிவித்தனர். ஆனால் அவற்றை இந்தியப்படையினர் நிராகரித்தனர். இதனால் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பெண்கள் முடிவு செய்தனர். தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக நின்று, ஒரு அடையாள உண்ணாநிலை போராட்டத்திற்கு அணி திரண்டனர்.

1988ஆம் ஆண்டு சனவரி 4 ஆம் நாள் அன்று அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதிலும் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர் பெண்கள்.

அன்னை பூபதி போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே, இந்திய அமைதிப்படையைக் கண்டித்து பலர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில்  பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. முதலில் அன்னம்மா டேவிட் உண்ணாநிலை போராட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டார்.

அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. ஆனால் திடீரென அங்கு வந்த ராணுவத்தினர் உண்ணாவிரத மேடையில் இருந்த அன்னம்மாவைக் கடத்திச் சென்றதால் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை 19 மார்ச் 1988 அன்று தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாநிலையிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவரோ, அல்லது பிள்ளைகளோ என்னை மருத்துவமனையில் சேர்க்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார் அன்னை பூபதி.

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”

எனும் குறளுக்கேற்ப நன்றாகச் சிந்தித்து பிறகே செயலில் இறங்கியிருக்கிறார் அன்னை பூபதி. இதன் மூலம் போராளிகளுக்குண்டான அவரது மன உறுதியையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இவ்வாறு தான் கொண்ட கொள்கைக்காக தண்ணீர் மட்டுமே அருந்தி சாகும் வரை உண்ணாநிலை இருந்தார் அன்னை பூபதி.

அவரது போராட்டத்தின் இடையில் பல தடங்கல்கள் வந்தன. போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆனாலும் அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

அவர் உண்ணாநிலையைத் தொடங்கி முப்பது நாட்கள் ஆன பின்னும், இனப்படுகொலை குற்றவாளிகளால் அவரது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவே இல்லை. சரியாக ஒரு மாதத்தில் அதாவது 19.04.1988 அன்று காலை 8.45 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

“தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.”
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.