ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!

230 0

இன்று உலக தாய்மொழி தினம்

இன்று (21)) “சர்வதேச தாய்மொழி தினம் உலகம் முழுக்க இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருத்தரும் தங்களின் தாய்மொழியை பேணி பாதுகாப்பது மற்றும் அதன் பெருமையை பரைசாற்றும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் வழங்கியது.

தகவல் பரிமாற்றத்தின் அடித்தளம் மொழிகள் தான் எனலாம். ஒவ்வொருவரும் மற்றவர்களின் மொழி மீது மரியாதை கொடுப்பது சிறப்பான முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

உலகம் முழுக்க ஏராளமான மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஒரே மொழியை பலவிதங்களில் உச்சரிக்கும் வழக்கமும் உண்டு.ஒரு சில கிலோமீட்டர் இடைவெளிக்குள் பல வட்டார வழக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகில் ஏராளமான மொழிகள் பயன்பாட்டில் இருந்தாலும், தாய்மொழி வாயிலாகவே ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்ய துவங்குகிறார். மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தங்கள் தாய்மொழியில் கல்வி பெறுவதற்கான வசதிகளை பெற முடிவதில்லை. மேலும், இது குறிப்பிட்ட பகுதிகளில் 90 சதவீதத்தை தாண்டியுள்ளது, ” என ஐக்கிய நாடுகள் சபையின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை

இன்று
உலகத் தாய்மொழித் திருநாள்

வாழ்த்து அச்சம் இரண்டையும்
பகிர்ந்து கொள்கிறேன்

தாய் என்ற அடைமொழிகொண்ட
சொற்களெல்லாம் உயர்ந்தவை;
உலகத் தன்மையானவை மற்றும்
உயிரோடும் உடலோடும் கலந்தவை

தாய்நாடு தாய்ப்பால்
தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள்

ஆனால்,
உலகமயம் தொழில்நுட்பம்
என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும்
தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன

உலக தேசிய இனங்கள்
விழிப்போடிருக்கவேண்டிய
வேளை இது

அரசு ஆசிரியர் பெற்றோர்
மாணவர் ஊடகம் என்ற ஐம்பெரும்
கூட்டணிகளால் மட்டுமே
இந்தப் பன்னாட்டுப்
படையெடுப்பைத் தடுக்கமுடியும்

சரித்திரத்தின் பூகோளத்தின்
ஆதிவேர் காக்க
ஓர் இனம்
தாய்மொழி பேணவேண்டும்

எங்கள் தாய்மொழி
எங்கள் அடையாளம்
மற்றும் அதிகாரம்.

சரித்திரத்தின் பூகோளத்தின் ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்.  எங்கள் தாய்மொழி எங்கள் அடையாளம் மற்றும் அதிகாரம்.