மீதொடமுல்ல அனர்த்தம் – ஜப்பான் ஆழ்ந்த அனுதாபம்

248 0

மீதொடமுல்ல குப்பை மேடு சரிவு சம்பவம் தொடர்பில் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடாக அவர் விடுத்துள்ள விசேட செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துரதிஸ்டவசமான சம்பவத்திற்கு ஜப்பானிய மக்களும் அரசாங்கமும் தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் ஜப்பான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஜப்பானின் தொழிநுட்ப குழுவொன்று மிக விரைவில் இலங்கை வரவுள்ளது.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த குழுவினரால் ஆலோசனை வழங்கப்படும் எனவும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்ததில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்.

அவர்களில் பெண்ணொருவரே நேற்றிரவு இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.