நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்: புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி

205 0

“புதுச்சேரி மாநிலத்தில் கவர்னரின் அதிகார வரம்புக்கு உட்பட்டே நான் செயல்படுகிறேன்”, என்றும், “நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்”, என்றும் கிரண்பெடி தெரிவித்தார்.

62-வது ரெயில்வே வார விழாவானது, சென்னை ஐ.சி.எப். (ரெயில் பெட்டி தொழிற்சாலை) வளாகத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு ஐ.சி.எப். பொதுமேலாளர் எஸ்.மணி தலைமை தாங்கினார். செயலாளர் கே.என்.பாபு, கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி ஓ.பி.கரே, முதன்மை மருத்துவப்பிரிவு அதிகாரி ஜவதோஷ்மித்ரா, முதன்மை தனிப்பிரிவு அதிகாரி மோகன்ராஜா, நிதி-ஆலோசனை பிரிவு அதிகாரி ரீனா ரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவுக்கு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி பங்கேற்றார். விழாவில் ஐ.சி.எப். நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு சிறப்பு பணிக்கான சுழற்கோப்பையும், 116 ஊழியர்களுக்கு வருட சாதனையாளர் விருதும் வழங்கி கிரண்பெடி கவுரவித்தார்.

ரெயில்வே வார விழாவில் கிரண்பெடி பேசியதாவது:-

இந்த விழாவுக்கு நான் வந்தது 2 காரணங்களுக்காக. ஒன்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு மீது எனக்குள்ள மரியாதை. மற்றொன்று இந்திய ரெயில்வேக்கும் எனக்கு தொடர்பு இருப்பது தான். ரெயில்வே பாதுகாப்பு படையில் (ஆர்.பி.எப்.) உதவி ஐ.ஜி.யாக நான் பணியாற்றி இருக்கிறேன். எனவே இந்த விழாவில் நான் பங்கேற்பது முக்கியமானது.

பொதுவாகவே மக்கள் தங்கள் உரிமைகளை பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறார்கள். அந்த உரிமை பறிக்கப்பட்டால் மட்டுமே போராடுகிறார்கள். உரிமைகளை மட்டும் பார்க்காமல் கடமைகளை நினைத்தும் உழைத்தால் தான் தேசம் முன்னேற்றம் அடையும். ஒவ்வொரு குடிமகனும் தன் பங்களிப்பை உணர்ந்து செயல்பட்டால் தான் தேசம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும். உண்மை, நேர்மை, பங்களிப்பு இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சேரும் போது தேசத்தின் நம்பிக்கை பயணம் சாத்தியம்.

குணாதிசயம், நோக்கம் இந்த இரண்டுமே இளைஞர்களுக்கு இரு கண்கள் போன்றது. மூத்த குடிமக்கள் கண்ட அனுபவங்களை பாடங்களாக இளைஞர் படையினர் படிக்க வேண்டும். இளைஞர் முன்னேற்றம் தான் நாட்டின் பலம். அதனுடன் ஒற்றுமையும் சேரும்போது நாட்டின் வளர்ச்சி இரட்டிப்பாகும். ஒவ்வொரு ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும்போது கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்த்தால் முன்னேற்றம் தான் கண்ணுக்கு தெரியவேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்த புது அனுபவம். அப்போதே எனது கடமை என்ன? என்பதை நான் உணர்ந்துவிட்டேன். தேசிய ஒற்றுமைக்கு இப்போது இருந்தே தயாராகுங்கள். என்ன தேவை? என்பதை நாட்டு குடிமகனாக யோசியுங்கள். நாட்டு மக்களின் பங்களிப்பே இந்தியாவின் முதுகெலும்பு.இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து கிரண்பெடியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கவர்னர் பொறுப்பில் நீங்கள் தவறுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறதே?

பதில்:- கவர்னர் அதிகாரம் என்ன? முதல்-அமைச்சர் அதிகாரம் என்ன? என்பது அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாகவே கூறப்பட்டு இருக்கிறது. எனது அதிகார வரம்புக்கு உட்பட்டே நான் செயல்படுகிறேன். நான் எதுக்கும், யாருக்காகவும் பயப்பட மாட்டேன். காவல்துறையில் எனக்கு கொடுக்கப்பட்ட பயிற்சியிலேயே பயமறியா பண்பை கற்றுக்கொடுத்து உள்ளனர். என் வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை நான் பார்த்துவிட்டேன். எனவே எதற்கும் கலங்க மாட்டேன்.

கேள்வி:- புதுச்சேரியில் குழப்பமான சூழல் நிலவுவதாக கூறப்படுகிறதே? உண்மையா?

பதில்:- புதுச்சேரி மாநில மக்கள் ஒருவித குழப்பத்தில் இருக்கிறார்கள். எல்லா கட்சிகளும் இணைந்து நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பது தான் அங்கு உள்ள மக்களின் விருப்பம். ஆனால் அங்கு நடப்பதோ வேறு. மக்கள் விரும்புவது நடக்கவில்லை. அது கூட என் கவலைகளில் ஒன்று தான்.

கேள்வி:- கவர்னர் பதவிக்கான வரம்பு மீறி செயல்படுவதாக உங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதே?

பதில்:- வரம்பு, அதிகார எல்லை, செயல்பாடு என எல்லாமே அரசியலமைப்பு ரீதியாக நான் பின்பற்றி வருகிறேன். எனவே இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அப்படி கிடைக்கும் தீர்ப்பு நல்ல அரசியலுக்கு முன்னோட்டமாக அமையும். மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.