குப்பைமேடு அனர்த்தம் தொடர்பாக நிவாரணம் வழங்குவதற்கான விசேட திட்டம் ஆரம்பம்

281 0

மீதொடமுல்லை குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததினால், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதொடமுல்லை குப்பைமேட்டின் பகுதியொன்று சரிவுக்குள்ளானதால் மரணமடைந்த அனைவரினதும் இறுதி சடங்குகளை அரசின் முழுச்செலவில் நடத்துவதற்கும், பாதிப்புக்கு உள்ளான மக்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம், சுகாதார வசதிகள் மற்றும் உடைமை பாதுகாப்பு உள்ளடங்கலாக அனைத்து விதமான தேவைகளையும் உடனடியாக வழங்கி வைப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் விசேட அறிவுறுத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழு மூலமாக தேவையான நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து செயற்படுத்தப்படுவதோடு, இடர் முகாமைத்துவ அமைச்சு, முப்படை வீரர்கள், விசேட படையினர், பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகர சபை உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தற்பொழுது தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.