ரணில் விக்ரமசிங்க புள்ளி விபரங்களுடன் நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும்

245 0

மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்ட கடன் காரணமாகவே நாட்டில் தற்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளதாக தெரிவித்தமை தொடர்பில் நாட்டின் பொறுப்புமிக்க ஒருவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புள்ளி விபரங்களுடன் நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வு பிரிவு இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.அரச ஊழியர்களுக்கு மாத்திரம் சம்பளம் வழங்குவதற்காக வருடாந்தம் 658 பில்லியன் பணத்தை ஒதுக்க நேர்ந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பெற்றுக்கொண்ட கடனை 20 வருடங்களில் பகுதி பகுதியாக செலுத்த வருடத்திற்கு 155 பில்லியன் செலுத்த வேண்டும்.இவ்வாறான நிலைமையில், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குவதும் சிரமமானதாக இருக்கும்.

இதனால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது குறைகூறாது, நிலவும் நிலைமை குறித்து பிரதமர் நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.கடனை செலுத்துவதற்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வது ஆரோக்கியமான காரியமல்ல எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.