சிவில் பாதுகாப்பு குழுவை புறக்கணித்த வடமாகாணசபை உறுப்பினர்கள் : சி.தவராசா

249 0

வடமாகாண சபைக்கான விடயமாகவே சட்டம் ஒழுங்கு காணப்படுகின்றது, எனவே சிவில் பாதுகாப்பு குழு கூட்டங்களை வடமாகாண சபையே நடத்த வேண்டும், ஆனால் ஒரு உதவியாக யாழ். அரசாங்க அதிபர் நடத்திக் கொண்டிருக்கின்றார் என வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

ஒரு உதவியாக யாழ். அரசாங்க அதிபர் சட்டம் ஒழுங்கை நடத்தி வருகின்றார். ஆனால் அதிலும் கூட மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா மட்டுமே கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மேற்படி கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,சட்டம் ஒழுங்கு மாகாண சபைக்குரிய விடயமாகும். சிவில் பாதுகாப்பு குழு கூட்டங்களை வடமாகாண சபையே ஒழுங்கமைப்பு செய்ய வேண்டும்.

ஆனால் ஒரு உதவிக்காக யாழ்.மாவட்ட செயலர் ஒழுங்கமைக்கின்றார்.இவ்வாறே வடமாகாண சபை பல விடயங்களை பயன்படுத்தாமல் இருக்கின்றது. மேலும் இந்த கூட்டங்களில் பேசும் பல விடயங்கள் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. எனவே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முழுமையாக கலந்து கொண்டு இவ்வாறான கூட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.