ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட அறிக்கையாளர் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு

241 0

நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களின் சுயாதீனம் குறித்த ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட அறிக்கையாளர் மொனிகா பின்டோ மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்த அறிக்கையை மொனிகா பின்டோ, ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், அவரின் அறிக்கை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ, அந்த அறிக்கையில் நாட்டின் நீதித்துறை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் இறைமையும் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த அவர், ஓரிரு தினங்களே தங்கி இருந்த நிலையில், இவ்வாறான முழுமையான அறிக்கை ஒன்றை தயாரித்து இருக்க முடியாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களை வைத்தே அவர் இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த அறிக்கைக்கான அரசாங்கத்தின் பதில், வெளிவிவகார அமைச்சின் ஊடாக மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment