சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே பொது அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும்-சீன ஜனாதிபதி ஷீ ஜின்(காணொளி)

248 0

சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே பொது அபிவிருத்தியையும், சுபீட்சத்தையும் அடைந்து கொள்ள முடியுமென சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக் குழுவினருடன், சீன பொதுமக்கள் அரங்கில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே சீனப் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திக்காக தமது நாடு மேலும் இரண்டு பில்லியன் யுவான்களை வழங்கும் என்றும் சீன ஜனாதிபதி இதன்போது கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டு பூர்தியாகும் நிலையிலும், இறப்பர்- அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 65 வருடங்கள் நிறைவடையும் நிலையிலும், இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை சீன ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்திக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவித்த சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின், இலங்கையின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டில் வழங்கப்படும் 400 மில்லியன் யுவான்களுக்கு மேலதிகமாக 2018 – 2020ஆம் ஆண்டு காலப் பகுதிகளுக்கென மேலும் இரண்டு பில்லியன் யுவான்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.