வெறுமனே கூடிக் கலைவதில் பயனில்லை!

146 0

பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி எவரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாதென்ற மகிந்த அணியின் அறிவிப்பு தமிழர்களுக்கான ஒரு சவால். இதுதான் நிலைமையெனில், தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை பூகோளத்துக்குப் புலப்படுத்த பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது அவசியமாகிறது. இதன் பின்னரும் தமிழர்கள் சிங்களவர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டுமென கருதுபவர்களை எந்த வகைக்குள் அடக்கலாம்? 

ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டிய கால அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. அடுத்த ஐந்து மாதங்கள் இந்தக் குட்டித்தீவு அமர்க்களமாகப் போகிறது.

தேர்தல் ஆணையம் தனது பணியை ஒழுங்காக செய்துள்ளதாயினும், ஜனாதிபதியே சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்டவராக இருப்பதால், அறிவிக்கப்பட்டவாறு தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் பலரிடம் இருக்கிறது.

கடந்த வருடம் நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்கள்  தாக்கலாகி எல்லா ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டதாயினும் இன்னமும் இடம்பெறவில்லை. அரசிடம் போதிய நிதிவளம் இல்லை என்று கைவிரிக்கப்பட்டதால் தேர்தல் காணாமல் போய்விட்டது. இதன் பின்னால் எந்த மறைகரம் காய்களை நகர்த்தியது என்பது இரகசியமல்ல.

இப்போது, ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகத்துக்கு, நடைபெறாது போன உள்ளூராட்சித் தேர்தலே முக்கிய காரணமாக உள்ளது. சஜித் பிரேமதாசவும், அனுர குமார திசநாயக்கவும் தங்கள் கட்சிகள் சார்பில் போட்டியிடுவதற்கான பரப்புரைகளை ஆரம்பித்து விட்டனர். ரணில் விக்கிரமசிங்க இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையாயினும் அவரே இரவு பகலாக இதற்கான சித்து விளையாட்டுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் இராஜபக்சவுக்கும், ரணிலுக்கும் இடையில் ஐந்து முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் மூன்றாம் நபர் எவரும் சேர்க்கப்படவில்லை. அரசல்புரசலாகவே தகவல்கள் கசிகின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டுமென்பதை பசில் ரணிலிடம் வலியுறுத்தி வருகிறார்.

இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் பெரமுன ஜனாதிபதி தேர்தலில் தனித்துப் போட்டியிட முடியாத இக்கட்டில் இருக்கிறது. அதேசமயம் ரணிலைத் தவிர வேறெவருடனும் கூட்டுச் சேர முடியாத நிலையிலும் உள்ளது. இதனை ரணில் நன்கறிந்து வைத்திருப்பதால் பசிலின் கோரிக்கைக்கு மசிந்து போகாமல் நாட்களை இழுத்துக் கொண்டிருக்கிறார். ரணில் தோற்கடிக்கப்படுவதையும் அதனுடன் பெரமுனவும் கீழ் விழுவதையும் பெரமுன விரும்பவில்லை. இந்த நெருக்கடியே ரணிலுக்கான அதிர்ஸ்ட காலம்.

நாடாளுமன்றத்தில் தங்கள் தயவிலேயே ரணில் பெரும்பான்மையுடன் இருப்பதாக அவருக்கு நினைவூட்டி,  நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்தும் எண்ணத்தை பசில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். பெரமுனவுக்கு கூடுதல் ஆசனங்கள் இருப்பதால் ரணிலை வளைத்துப் போடலாமென பசில் நம்புகிறார் போலும். பொதுத் தேர்தலை முதலில் நடத்தி பெரும்பான்மையை பெரமுன பெற்றுவிட்டால், ரணிலுக்கு பெப்பே காட்டிவிட்டு ஜனாதிபதி தேர்தலில் பெரமுன சார்பில் ஒருவரை நிறுத்தி வெற்றி பெறலாமென்ற எதிர்பார்ப்பு பசிலிடம் மேலோங்கிக் காணப்படுகிறது.

இதனை முற்கூட்டியே அறிந்து வைத்துள்ள ரணில், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல நடத்த விரும்புகிறார். இப்போது ரணிலுக்கும் பசிலுக்கும் இடையே ஆடு – புலி விளையாட்டு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. ஜே.ஆரிடம் கற்ற நரி மூளையை இங்கு தந்திரமாக ரணில் பயன்படுத்துகிறார்.

பசிலுடன் இரகசிய பேச்சுகளை நடத்திவரும் அதேசமயம் மகிந்தவுடனும் ரணில் தனித்தனி பேச்சுகளை தொடருகிறார். அதேவேளை, சஜித் அணியிலிருந்து சிலரை தம்பக்கம் இழுக்கும் மாயமான் காட்சிகளையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். சமகாலத்தில் சஜித் தலைமையிலான அரசியல் கட்சியை சட்டத்துக்கு உட்பட்ட வகையில் இல்லாமற் செய்யும் முயற்சிகளும் இவர் தரப்பால் மேற்கொள்ளப்படுகிறது.

மே தின மேடையில் கட்சித் தாவல்கள் சிலரை அடையாளப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாயினும், ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் நான்கு மாதங்கள் இருப்பதால் தமது போட்டியை அறிவித்த பின்னர் அவர்களின் மேடையேற்றத்தை நடத்துவதற்கு ஏற்பாடாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

சமகாலத்தில் பெரமுன தரப்பிலிருந்து வித்தியாசமான ஓர் அறிவித்தல் வந்துள்ளது. பொதுஜன பெரமுனவின் ஆதரவு பெற்றால் மட்டுமே ஒருவர் ஜனாதிபதியாக முடியுமென்று மகிந்த அணியைச் சேர்ந்தவரான ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதாவது, பெரமுனவின் ஆதரவைப் பெற முடியாதவர் வரப்போகும் தேர்தலில் ஜனாதிபதியாக முடியாதென்பது இந்த அறிவிப்பு. இது மறைமுகமாக ரணிலுக்கு வழங்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்.

”அங்குமிங்கும் அலைந்து ஆட்களை இழுப்பதற்கு முயற்சிக்க வேண்டாம். எங்கள் ஆதரவை நீங்கள் பெறுவீர்கள் என்றால், நீங்களே அடுத்த ஜனாதிபதி” என்று மகிந்த தரப்பு ரணிலுக்கு கூறியிருப்பதை இதனூடாகக் கவனிக்க முடிகிறது. இதனை சீரியஸான ஆலோசனையாகவும் பார்க்க முடிகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அறுபத்தைந்து இலட்சம் வாக்குகளைப் பெற்ற பெரமுன, அந்த வெற்றி நம்பிக்கையில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதையும் இந்த அறிவிப்பினூடாக காணமுடிகிறது.

யார் என்னதான் சொன்னாலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது ஐக்கிய தேசிய கட்சி கணிசமான ஆசனங்களைப் பெற வேண்டுமென்பதை இலக்காக வைத்து ரணில் தனது ஆட்டங்களை மேற்கொண்டு வருகிறார். தமது பாட்டனார்களான டி.ஆர்.விஜேவர்த்தனவும், டி.எஸ்.சேனநாயக்கவும் உருவாக்கிய ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் அரியாசனம் ஏற்றுவதும், தமது தாய்மாமன் மகனான ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக தற்போது இருக்கும் றுவான் விஜேவர்த்தனவிடம் கட்சியைப் பாரப்படுத்துவதும் இவரது அடிமனதுத் திட்டம்.

அதற்காக எந்தப் பிசாசின் உதவியையும் பெறுவதற்கு ரணில் தயாராகவுள்ளார். அந்த இலக்கை நோக்கியே அவரது சகல நடவடிக்கைகளும் தொடரும் என்பது மகிந்த தரப்புக்கும் தெரியாததல்ல. இதனை ஏனைய போட்டியாளர்களும் நன்கறிவர். பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி எவரும் ஜனாதிபதியாக முடியாதென்ற மகிந்த தரப்பின் அறிவிப்பு ரணிலுக்கு மட்டுமன்றி தாயகத் தமிழருக்கான சவாலும்கூட.

வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஐம்பது வீதமான வாக்குகளை எவராலும் பெற முடியாது போகுமென்ற கருத்து பரவலாக உள்ளது. இலங்கை சிங்கள தேசம் – பௌத்த மத நாடு என்ற பேரினவாத சிந்தனையின் வெளிப்பாடாக, தமிழரின் வாக்கின்றி எவரும் ஜனாதிபதியாகலாம் என்பதை பெரமுனவின் கருத்து வெளிப்படுத்துகிறது.

தமிழர் தரப்பிலிருந்து ஒரு பொதுவேட்பாளர் தேவையில்லையென்று கருதும் தமிழர்களுக்கு இராஜபக்சக்கள் தரப்பிலிருந்து வந்திருக்கும் சூடு இது. தமிழர் வாக்குகளின்றி, பெரமுனவின் சிங்கள வாக்குகளால் ஒரு சிங்கள ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியுமென்ற நம்பிக்கை மகிந்த குடும்பத்துக்கு இப்போதும் இருக்கிறது. இவர் சொல்வதுதான் நிஜமெனில் இலங்கையில் எந்தச் சிங்களவரும் தமிழரின் வாக்குகளின்றி ஜனாதிபதியாகலாம். எனவே, அவர்களுக்கு தமிழர் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை.

தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கான எண்ணங்களை வெளிப்படுத்தி ஒரு வேட்பாளர் தமிழர் தரப்பில் நிறுத்தப்பட்டால் அது தமிழரின் ஒன்றுபட்ட ஒற்றுமையை வெளிப்படுத்தும். ஏறத்தாழ ஒரு சர்வஜன வாக்கெடுப்பு போலவும் அமையலாம். இவ்விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே சிலர் அதிகப் பிரசங்கிகளாகவும், விளக்கமற்ற கருத்துகளை பரப்புபவர்களாகவும் இருப்பதைக் காணமுடிகிறது. தமிழர் ஒருவர் போட்டியிட்டால் சிங்களம் கொதிக்கப் போகிறது, இனவாதம் மீண்டும் தலைதூக்கப் போகிறது, அவர்களை வம்புக்கு இழுக்க வேண்டாமென்று பல்வேறு வித கருத்துகளை இவர்கள் தாங்களாகவே பரப்ப ஆரம்பித்துள்ளனர்.

இதற்குள் யார் அந்தப் பொது வேட்பாளர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிங்களத்துக்கு வாக்களிக்க வேண்டுமென்கிற சில அவசர குடுக்கைகளின் குரல் இது. தோற்பதற்காக ஏன் போட்டியிட வேண்டுமென்கிற அறிவிலிகளையும் பார்க்க முடிகிறது. இவ்விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (தமிழ் காங்கிரஸ்) தேர்தலை பகி~ஸ்கரிக்க வேண்டுமென்பதை அறிவித்துவிட்டது. இது அவர்கள் நிலைப்பாடு. மற்றையோர்தான் இப்போது தாமும் குழப்பத்தில் அகப்பட்டு மற்றவர்களையும் குழப்பத்துக்கு உள்ளாக்குகின்றனர்.

பொதுவேட்பாளர் வேண்டாம் என்பவர்கள் சிங்கள வேட்பாளருக்கு தமிழர் வாக்களிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் என்பது புரிகிறது. இதனை ஏன் அவர்கள் பகிரங்கமாகக் கூறக்கூடாது.

இயக்க அரசியலும், இணக்க அரசியலும் சிங்கள இன அரசியலுடன் இயைந்து செல்ல முடியாதவை என்பதை பட்டறிவு பெற்ற பின்னரும், சிங்கள வேட்பாளருக்கே தமிழர் வாக்களிக்க வேண்டுமென விரும்புபவர்களை இலகுவாக அடையாளம் காணும் நேரமிது.

முள்ளிவாய்க்கால் ஈர நினைவுகள் காயாது இருக்கும் இந்த மாதம் 19ம் திகதி பொதுவேட்பாளர் விடயமாக முடிவெடுப்பதற்கு தமிழரசுக் கட்சி கூடுகிறது என்று ஒரு செய்தி. சுமந்திரன், சாணக்கியன், சி.வி.கே.சிவஞானம் போன்றோரின் கருத்துகள் பொதுவேட்பாளருக்கு எதிராக ஏற்கனவே வெளிவந்துவிட்டன. கிளிநொச்சி சிறீதரன் கொள்கை அளவில் பொதுவேட்பாளரின் பக்கம்.

கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலை இரண்டு பக்கமும் ஆடும் வல்லமையானது. ஆகட்டும் பார்க்கலாம் எனும் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பாணியில், எல்லாவற்றுக்கும் ஓம் தம்பி சொல்லி பழக்கப்பட்டு போனவர் மாவையர். பொதுவேட்பாளர் கரு சும்மா விளையாட்டுக்கானது அல்ல. வெறுமனேயே செய்திக்கானதும் அல்ல. தமிழரின் தாயகக் கோட்பாட்டு அரசியலை பூகோள அரசியலுக்கு புட்டுக்காட்ட நடத்தப்படும் வாக்களிப்பு.

கூடினோம், அலசினோம், கதைத்தோம், மக்களுடன் பேசுவோம், மீண்டும் கூடுவோம், உரிய நேரத்தில் முடிவெடுப்போம் என்ற வழமையான பாணியில் தமிழரசுக் கட்சி 19ம் திகதி கூடிக் கலையுமென்றால், கடந்த பொதுத்தேர்தலில் சிங்கள தேசத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திர கட்சிக்கும் அவர்களின் மக்கள் வழங்கிய தீர்ப்பை சம்பந்தப்பட்டவர்கள் ஒரு தடவை நினைத்துப் பார்ப்பது நல்லது.

பனங்காட்டான்