சமூக பழக்க வழக்கத்தை சுட்டிக்காட்டி தீர்ப்பு அளிக்கக்கூடாது

219 0

சமூக பழக்க வழக்கத்தை சுட்டிக்காட்டி தீர்ப்பு அளிக்கக்கூடாது என்று கீழ்கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் திருமங்கலம் கண்டிகை கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலுக்குள் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந் தேதி நள்ளிரவில் சிலர் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர். உண்டியல் உடைக்கப்படும் சத்தத்தை கேட்டு கோவில் அருகே படுத்திருந்த சுப்பிரமணி என்பவர் கூச்சலிட்டார்.

இதனால் கொள்ளையர்கள் சுப்பிரமணியை கட்டையால் தாக்கினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், மாரி, ராஜா, செல்வம், பழனி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த காஞ்சீபுரம் மாவட்ட கோர்ட்டு, குமார் உள்பட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து 31.7.2015 அன்று உத்தரவிட்டது.இதை எதிர்த்து குமார் தவிர மற்ற 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் நாகமுத்து, சேஷசாயி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்கள் 4 பேரையும், மேல்முறையீடு செய்யாத குமாரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

மேலும், தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

மனுதாரர்கள் சார்ந்துள்ள சமூகம் முந்தைய காலத்தில் திருட்டு செயல்களில் ஈடுபட்டதாகவும், அதனால் மனுதாரர்கள் குற்றம் செய்திருக்கலாம் என்று கருதியும் அவர்களுக்கு காஞ்சீபுரம் கோர்ட்டு தண்டனை வழங்கி உள்ளது. தேவையற்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டு கீழ்கோர்ட்டு குற்ற வழக்குகளில் தீர்ப்பளிக்கக்கூடாது.

சமூக பழக்க வழக்கத்தை சுட்டிக்காட்டி அதன் அடிப்படையில் தீர்ப்பளிப்பது சரியானது அல்ல. எங்களுக்கு தெரிந்தவரை இதுபோன்ற ஒரு மோசமான தீர்ப்பை பார்க்கவில்லை.

இதுபோன்ற தீர்ப்புகளை வழங்குவது இதுவே இறுதியாக இருக்க வேண்டும். எனவே, இந்த தீர்ப்பு நகலை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழ்கோர்ட்டுக்கும் சுற்றறிக்கையாக ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் அனுப்பிவைக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.