பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட போராளிகள் சரண்

240 0

பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் ஆயுதங்களை மாகாண முதல்-மந்திரி முன்னிலையில் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம் அல்கொய்தா, பாகிஸ்தான் தலீபான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்பினரின் சொர்க்க புரியாக திகழ்ந்து வருகிறது. அவர்களை ஒடுக்குவதற்கு அவ்வப்போது அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தி வந்திருக்கிறது. உள்நாட்டு படைகளும் குண்டுவீச்சில் ஈடுபட்டு வந்துள்ளன.அங்கு பல்வேறு போராளி அமைப்புகளும் இயங்கி வந்தன.

இந்த நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட போராளிகள் நேற்று முன்தினம் தங்கள் ஆயுதங்களை மாகாண முதல்-மந்திரி முன்னிலையில் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.

அவர்கள் பலுசிஸ்தான் குடியரசு ராணுவம், பலுச் விடுதலை ராணுவம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.அங்கு பாதுகாப்பு படையினரை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை இவர்கள் கடந்த காலத்தில் நடத்தி வந்துள்ளனர்.

இவர்கள் சரண் அடைந்தது குறித்து தென்பிராந்திய ராணுவ தளபதி அமிர் ரியாஸ் கூறுகையில், “யாரெல்லாம் ஆயுதங்களை கைவிட்டு விட்டு, சரண் அடைய விரும்புகிறார்களோ அவர்களை வரவேற்கிறோம். அவர்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியும்” என்று குறிப்பிட்டார்.