தமிழக உள்மாவட்டங்களில் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

236 0

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் வறட்சியின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி தவித்து கொண்டு இருக்கிறது. தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தநிலையில் தென் தமிழகத்தை ஒட்டி மேலடுக்கு சுழற்சி ஒன்று கடந்து செல்வதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது:-

மராட்டிய மாநிலம் விதர்பாவில் இருந்து மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி தென் தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் கடந்து சென்று தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதிக்கு செல்கிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் வருகிற 26-ந்தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். விதர்பா பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி, கடல் பகுதியில் உருவாகி இருந்திருந்தால், தமிழகத்துக்கு நல்ல மழை கிடைத்து இருக்கும். நாளை (இன்று) வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் 105 டிகிரி முதல் 111 டிகிரி வரை வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

அரூர் 5 செ.மீ., தர்மபுரி மற்றும் நத்தம் தலா 4 செ.மீ., ஒகேனக்கல் மற்றும் தளி 3 செ.மீ., பென்னாகரம், சத்தியமங்கலம், தேன்கனிக்கோட்டை, பவானிசாகர் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்து உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.