தமிழ் மக்களை அரசியல் சமத்துவத்துடன் வாழ விடக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதி – டக்ளஸ்

204 0

தமிழ் மக்களை அரசியல் சமத்துவத்துடனும், பொருளாதார விருத்தியுடனும் வாழ விடக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டு செயற்பட்டு வருவதை தமிழ் மக்கள் இன்று உணர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்ப்பு அரசியலாலும், இணக்க அரசியலாலும் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க இயலாதவர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், கிடைக்கின்ற நலத் திட்டங்களையும் அரசியல் காழ்ப்புனர்ச்சி மற்றும்; போட்டித் தன்மைகள் காரணமாக தட்டிக் கழிக்கின்றார்கள்.

தாம் மத்திய அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தியபோது, மகாவலி கங்கை நீரை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விவசாய எழுச்சிக்காக கொண்டுவருவதற்கும், களுகங்கை நீரை வடக்கு மாகாணத்திற்கு குடிநீர் தேவைக்காக கொண்டுவருவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக ஈபிடிபியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இரணைமடு குளத்துக்கு நீரை அங்கு தேக்கிவைத்து விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்குவதும், மேலதிகமான நீரை யாழ்ப்பாண மக்களுக்கு குடி நீராக வழங்குவதும் தமது நோக்கமாக இருந்தது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ ‘மகாவலி நீரை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவந்தால் அந்தத்திட்டத்துடன் சிங்களவர்களும் வந்து குடியேறுவார்கள்’ என்று இனவாதம் பேசி அதற்குத் தடை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தாமும் பயனுள்ள திட்டங்களை திட்டமிட்டு செய்ய விரும்பாமலும், அமையப் பெறுகின்ற நல்ல திட்டங்களையும் சாதகமாக நடைமுறைப்படுத்தாமலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தும் அரசியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பயனற்றதாகவே இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.