பாலாற்றின் கிளை நதியில் மேலும் ஒரு புதிய தடுப்பணை

324 0

201607271152294171_Palar-river-more-a-new-reservoir-AP-CM-Chandrababu-Naidu_SECVPFஆந்திர அரசு ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை அமைத்து தமிழகத்தின் நீராதரங்களை பறித்து வருகிறது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர், மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தற்போது வழக்கு தொடுத்துள்ள நிலையிலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பல இடங்களில் தடுப்பணையின் உயரத்தை உயர்த்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாலாற்றின் மற்றொரு கிளையாறான ஜிங்க் காட்டாற்றில் தடுப்பணை கட்டும் பணி நடக்கிறது. ஜிங்க் காட்டாறு மண்டாகாடு காட்டு பகுதியில் அம்மாபாதம் மலைக்கும் சவளைமலைக்குமிடையே உள்ள பகுதியில் உற்பத்தியாகிறது. கனக நாச்சியம்மன் கோவில் அருகே புல்லூரில் ஜிங்க் காட்டாறு பாலாற்றில் கலக்கிறது.

ஆறு உற்பத்தியாகும் இரண்டு மலைக்கும் இடையே தற்போது ஆந்திர அரசு புதியதாக அணையை கட்டும் பணியை கடந்த பத்து நாட்களாக செய்து வருகிறது. சுமார் 18 அடி உயரத்திற்கு அணைக்கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு இரண்டு மலைக்களுக்கிடையே மண் கொட்டி தடுப்பு அமைத்துள்ளனர்.

இந்த இடத்தில் சுமார் ரூ.6 கோடி செலவில் மிகபெரிய அளவில் தடுப்பணையை அமைத்து தண்ணீரை தேக்கி வைக்க ஆந்திர அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே பாலாற்றின் மற்றொரு கிளை நதியான திப்ரே அணையின் குறுக்கே ஐந்து தடுப்பணைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது புதியதாக ஆந்திர அரசு இந்த அணையை கட்டுவதால் ஜிங்க் காட்டாற்றிலிருந்து இனி ஒரு சொட்டு தண்ணீரும் பாலாற்றிற்கு வருவதற்கு வாய்ப்பில்லை. அங்கு கட்டப்படும் அணையிலிருந்து தண்ணீரை தமிழகத்திற்கு வராமல் தடுத்து ஆந்திர பகுதியில் உள்ள பெரும்பள்ளத்திற்கு கொண்டு செல்லும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

காட்டுபகுதியில் புதிய அணைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் சாலைகளும் புதியதாக அமைத்துள்ளனர். எல்லா ஆறுகளிலும் இந்த தடுப்பணை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இனி தமிழகத்திற்கு பாலாற்றில் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பில்லை. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகள் பாதிக்கபடுவார்கள். இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கனகநாச்சியம்மன் கோவில் ஆடி பெருக்கு விழாவிற்கு ஆகஸ்டு 2-ந்தேதி வரும் ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு அணைக்கட்டும் பகுதியை பார்வையிட வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அங்கு சிமெண்டு சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது.