வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

360 0

 

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபுலவு மக்கள் 50 ஆவது நாளாகவும் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்குமிடையில் கடந்த திங்கட்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது இராணுவத்தினர் வசமுள்ள காணிளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட செயலகங்களில் கூட்டங்களை நடத்தி தீர்வு காண இணக்கம் காணப்பட்டது.

இதற்கமைய இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று பிற்பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், காதர் மஸ்தான் முல்லைத்தீவு மாவட்ட கடற்படை, விமானப்படை, இராணுவ கட்டளைத் தளபதிகள், கோப்பாபுலவு மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு மக்களுக்கு அனுமதியில்லையென உதவி அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன் அவர்களை கூட்டத்திலிருந்து வெளியேறுமாறும் வலியுறுத்தினார்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய கோப்பாபுலவு மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

எனினும் இந்த கூட்டத்தில் முழுமையாக செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.