மீதொட்டமுல்லை குப்பை மேட்டுச் சரிவின் மீட்புப் பணிகள் தொடர்கின்றன – பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு

266 0

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவை அடுத்து, அந்த பகுதியில் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மத்தியில் நோய்பரவும் அபாயம் நிலவியது.

எனினும் இதனை தடுக்கும் வழிமுறைகள் தற்போது கையாளப்படுவதாக, வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி தனிமனித சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நுளம்பு உள்ளிட்ட நோய் காவிகளின் ஊடாக ஏற்படுகின்ற நோய்ப்பரவலையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கு நோயெதிர்ப்பு மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

11 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இணைப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்தும் அவர்களை தேடும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

சம்பவத்தில் காயமடைந்த 11 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி, 79 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 17 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் 228 குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.