பாதுகாப்பு செயலாளருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட சந்திப்பு

245 0

வடப் பகுதியில் இராணுவம் நிலைக் கொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நடாத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மன்னார் – முள்ளிக்குளம், முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மற்றும் யாழ்ப்பாணம் – வலிகாமம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள காணிகளை விடுவிக்கின்றமை குறித்து இன்று ஆராயப்பட்டுள்ளது.

காணி பிரச்சினையினால் மக்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து இன்றைய தினம் பாதுகாப்பு செயலாளருக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு தரப்பினர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.