குல்பூஷண் மரண தண்டனை: குற்றப்பத்திரிகையின் நகலை பாக். இன்னும் வழங்கவில்லை – வெளியுறவு அமைச்சகம் தகவல்

197 0

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகையின் நகலை பாகிஸ்தான் இன்னும் வழங்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகையின் நகலை பாகிஸ்தான் இன்னும் வழங்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், தங்கள் நாட்டில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் கடந்த ஆண்டு கைது செய்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அந்த நாட்டின் ராணுவ கோர்ட்டு, அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 10-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

அவரை உயிரோடு மீட்டு இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மற்றும் ராணுவ கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குமாறு இந்தியா கோரி உள்ளது.ஆனால் குற்றப்பத்திரிகையின் நகலை பாகிஸ்தான் இன்னும் வழங்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இதுகுறித்து வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் கோபால் பாக்லே கூறியதாவது:-

குல்பூஷண் ஜாதவ் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகலையும், ராணுவ கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல்களையும் வழங்குமாறு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால் இதுவரை பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளரை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சந்தித்து இந்த ஆவணங்களை தருமாறு நேரில் கேட்டுக்கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.குல்பூஷண் ஜாதவ்வுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதனை நியாயப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது.இதற்காக குல்பூஷண் ஜாதவ் அளித்த வாக்குமூலம் மற்றும் இந்த வழக்கு குறித்த விவரங்களை ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது. இதற்காக புதிய ஆவணங்களை தயார் செய்யும் பணிகளில் அந்த நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.