அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பு வெற்றி: துருக்கி பிரதமர் பினாலி அறிவிப்பு

207 0

துருக்கியில் அதிபருக்கு அதிக அதிகாரம் தரும் அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் பிரதமர் பினாலி யெல்டிரிம் அறிவித்துள்ளார்.

துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதை பொதுமக்கள் உதவியுடன் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் முறியடித்தார். அதைத் தொடர்ந்து 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோரும் அதில் அடங்குவர். ராணுவ புரட்சியை தொடர்ந்து துருக்கி அரசியல் சாசனத்தில் அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் திருத்தம் செய்ய எர்டோகன் முடிவு செய்தார். அதை தொடர்ந்து அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

அதுகுறித்து பொது மக்களிடம் கருத்து கேட்க நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் மக்கள் வாக்களித்தனர்.

இந்நிலையில், அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் பிரதமர் பினாலி யெல்டிரிம் அறிவித்துள்ளார். இந்த வாக்கெடுப்பு மூலம் அதிபர் முறை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் இது மக்களால் எடுக்கப்பட்ட முடிவு. நமது ஜனநாயக வரலாற்றில் புதிய பக்கம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.