வெலிகடை சிறையில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த மோதலில் 27 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உரிய பொலிஸ் விசாரணை ஒன்றை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாளர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.பொலிஸ் மா அதிபர், சிறைச்சாலை ஆணையாளர், சிறைச்சாலை துறைக்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வெலிகடை சிறையில் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் திகதி நடந்த சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இது சம்பந்தமாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

