மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு(காணொளி)

383 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த டெங்கு நோயாளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இப்றாலெப்பை தெரிவித்தார்.

மட்டக்களப்பில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் அதேவேளையில், டெங்கின் தாக்கத்தினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே உள்ளதாகவும், சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பில் டெங்கு நோய்த்தாக்கத்தால் நேற்று மாலை 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து, டெங்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.