மின் கட்டண உயர்வு பற்றி 22-ந்தேதி கருத்து தெரிவிக்கலாம்: கலைவாணர் அரங்கில் கூட்டத்துக்கு ஏற்பாடு

168 0

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 500 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படும் அளவு மின் கட்டணம் உயர உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ஆன்லைன் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே பொது மக்களை நேரில் அழைத்து கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை நகரங்களில் இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. கோவையில் வருகிற 16-ந்தேதி எஸ்.என்.ஆர். கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

மதுரையில் தள்ளாக்குளத்தில் உள்ள லட்சுமி சுந்தரம் அரங்கில் 18-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் 22-ந்தேதி கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும். பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அங்கு பதிவு செய்யலாம். அவர்களை அழைத்து மின் வாரியம் குறைகளை கேட்டறியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.