விழுப்புண்கள்!அகரப்பாவலன்.

365 0

விழுப்புண்கள்
போரினில் ஏற்பட்ட வீரத்தின்
அடையாளங்களாம் ..

அது ..
நெஞ்சிலும்,முகத்திலும்
ஏற்படவேண்டும் என்கிறது
புறநாநூறு ..

அன்றையப் போர் !
இடம் குறித்து
முதியோர்,குழந்தைகள் தவிர்த்து
போர்த் தர்மம் காத்து
நடைபெற்றது ..

நேருக்கு நேர்
களமாடிய காலம் ..
புறமுதுகு காட்டாத வீரம்
போற்றப்பட்ட காலம் ..

முள்ளிவாய்களிலும்
போர் நடந்தேறியது ..
போர்த்தர்மத்தை மீறிய
கொடூரப் போர் ..

தமிழீழத்தோடு
தனித்து நின்று
சமராட முடியாத கோழைகள்
உலகச் சண்டியரை
கூட்டுச் சேர்த்துக் கொண்டு
கொடியவகை
ஆயுதங்களை ஏந்தி
போர்த் தர்மத்தை மீறி
அப்பாவித் தமிழரை
கொன்று குவித்த நேரம் ..

தமிழீழ மறவர்கள்
நெஞ்சினில் குண்டேந்தி
வீரமரணம் எய்திய நேரம் ..

ஆயிரக்கணக்கான
தமிழீழ மறவர்கள்
விழுப்புண் ஏந்திய நேரம் ..

விழுப்புண்கள்
வீரத்தின் அடையாளம்
மட்டுமல்ல ..
நடந்த போரின்
வரலாற்று அடையாளமுமாகும் ..

இன்று ..
போரின் வடிவம் மாறியுள்ளது..
போரின் இலக்கு
என்றும் மாறாதது ..

தமிழீழ மண்ணும்
தமிழீழக் காடும்
பல போர்களைக்
கண்டுள்ளது – அவை
சோழனை கண்டுள்ளது ..
பாண்டியனை கண்டுள்ளது ..
பண்டாரவன்னியனை கண்டுள்ளது – ஏன்
ஐரோப்பியரையும் கண்டுள்ளது ..

தமிழீழ மண்ணும்
தமிழீழக் காடும்
பல விழுப்புண்களோடு
காட்சியளிக்கின்றது ..

விழுப்புண்களின் சக்தி
ஒன்றாய் திரளும்
இயற்கை அன்னை
பாதை திறப்பாள் ..
தமிழன்னையின் விலங்கு
தகர்க்கப்படும்.
-அகரப்பாவலன்-