திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி.

2076 0

02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கல்விக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் சிறப்பு மதிப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்விலே தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் கல்விப்பிரிவு மற்றும் தமிழ்த்திறன் பிரிவின் பொறுப்பாளர் திரு இரா. மனோகரன் அவர்களுக்கு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் ஆற்றிய தமிழ்ப்பணிக்காக “தமிழ்த்திறனாளன் “என மதிப்பளித்து, யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் கெளரவிக்கப்பட்டார்.

தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள், தமிழாலய நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மண்டபத்தினை நிறைத்திருந்தனர்.

இவ்வேளையில் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் மற்றும் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் இணைந்து திரு. இரா. மனோகரன் அவர்களையும் அவரது துணைவியார் திருமதி. இராசேஸ்வரி மனோகரன் (வசந்தி) அவர்களையும் மேடைக்கு அழைத்து வந்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர், துணைப்பொறுப்பாளர் மற்றும் மாநிலப்பொறுப்பாளர்களோடு சிறப்புவருகையாளராக வருகை தந்திருந்த அனைத்துலகத் தொடர்பகத்தின் மத்திய நிர்வாகப்பிரிவு உறுப்பினரும், அனைத்துலகத் தமிழ்க் கல்விக் கழக விடயங்களுக்கான இணைப்பாளர் திரு.இரங்கன் அவர்களும் மேடையில் அமர்ந்திருக்க திரு. ந.திருநிலவன் அவர்கள் மதிப்பளிப்பு நிகழ்வினை தலைமையேற்று நெறிப்படுத்தியிருந்தார். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனையோடு தொடங்கிய நிகழ்வில் முதலில் மதிப்பளிப்புப்பட்டையம் வாசிக்கப்பட்டு சிறப்பு வருகையாளர் திரு. இரங்கன் அவர்களால் பதக்கம் அணிவிக்கப்பட்டு, மதிப்பளிப்பும் வழங்கபட்டது.

தொடர்ந்து அனைத்துலகத் தொடர்பகம் சார்பாக திரு. இரங்கன் அவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு. சிறீ இரவீந்திரநாதன் அவர்களும் வாழ்த்துரைகள் வழங்கியிருந்தார்கள்.  நிறைவாகத் “தமிழ்த்திறனாளன் “ திருமிகு இரா.மனோகரன் அவர்களின் ஏற்புரையோடு தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தத்துவவழி நின்று, அவரது சிந்தனைகளை ஏற்று தமிழீழம் கிடைக்கும்வரை போராடுவோம் எனும் உறுதியோடும் “தமிழரின் தாகம் தமிழீழ த் தாயகம் ” எனும் தாரகமந்திரத்தோடும் மதிப்பு நிகழ்வு நிறைவுற்றது