காணாமல் போன மகனை காணாமலேயே இறந்த தாய்!

214 0
´´சாகுறதுக்கு இடையில என்ட பிள்ளைகள கண்ணால காணனும். கடைசி வரைக்கும் நான் சாகும் மட்டும் மரண சான்றிதழை நான் வாங்க மாட்டேன்” என உறுதியாக இருந்த தங்கராசா செல்வராணி, அதே நிலைப்பாட்டில் இன்று இந்த உலகை விட்டு விடைப் பெற்றுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அதன் பாதிப்புகள் இன்று வரை அவ்வாறே காணப்படுகின்றன.

யுத்த காலப் பகுதியில் காணாமல் போன உறவுகளை தேடி, இன்றும் இலங்கையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணாமல் போனோரை தேடும் தேடல், இன்றும் தொடர்கின்றது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்றும் தமது உறவுகளை தேடி போராடி வருகின்ற நிலையில், போராட்டங்களில் ஈடுபட்ட பலர், போராட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நோய்கள், உடலில் வலுவின்மை போன்ற காரணங்களில் பெற்றோர் போராட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அதேவேளை, தமது உறவுகளை தேடி போராட்டங்களை ஆரம்பித்து, வீதிகளில் போராடிப் போராடி, இறுதி வரை காணாமல் போன உறவுகளை கண்டறிய முடியாது, இன்று வரை 108 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக காணாமல் போனோரின் உறவுகள் சங்கம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு போராடிய வயது முதிர்ந்த நிலையில், இறுதி வரை காணாமல் போன தனது உறவுகளை கண்டு பிடிக்க முடியாத நிலையில், மற்றுமொரு தாய் உயிரிழந்துள்ளார்.

வவுனியா – செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான தங்கராசா செல்வராணியே இவ்வாறு இந்த உலகை விட்டு விடைப் பெற்றுள்ளார்.

2008 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது வீட்டிலிருந்து அனைத்து ஆண்களையும் தொலைத்த இந்த பெண், அவர்களை இறுதி வரை தேடி, தனது தேடலில் தோல்வியை சந்தித்து விடைப் பெற்றுள்ளார்.

தங்கராசா செல்வராணி, தனது மகன், பேரன் மற்றும் மருமகன் ஆகியோரையே இவ்வாறு தொலைத்துள்ளார்.

தனது மருமகனை ராணுவத்தினர் நேரடியாகவே வீட்டிற்கு வந்து அழைத்து சென்ற நிலையில், அவர் காணாமல் போயுள்ளதாக செல்வராணி கடந்த மார்ச் மாதம் வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, தனது மகன் மற்றும் பேரன் ஆகியோர் வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றிற்கு சென்ற வேளையில், திடீரென காணாமல் போனதாகவும் அவர் அன்று கூறினார்.

தனது மகன் மற்றும் பேரன் ஆகியோர் காணாமல் போன இடத்தில், இலங்கை பாதுகாப்பு பிரிவினர் நடமாடியமைக்கான அடையாளங்கள் காணப்பட்டதையும் அவர் நினைவூட்டினார்.

2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய தேடலை செல்வராணி தனது உயிர் பிரியும் இறுதி நொடி வரை தொடர்ந்திருந்தார்.

எனினும், கடந்த மார்ச் மாதத்தை அண்மித்த காலப் பகுதியில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, செல்வராணி ஒரே இடத்திலேயே முடங்கியிருந்தார்.

வயது முதிர்வு மற்றும் நோய் தாக்கம் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார்.

தனது உறவுகள் காணாமல் போன தருணம் முதல் போராட ஆரம்பித்த இவர், கடந்த மார்ச் மாதத்தை அண்மித்த காலம் வரை போராடி வந்துள்ளார்.

செல்வராணி, கடந்த மார்ச் மாதம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

´´சாகுறதுக்கு இடையில என்ட பிள்ளைகள கண்ணால காணனும். ஒரு பிள்ளையும் இல்லாம இன்றைக்கு இருக்குறேன். போகாத இடமும் இல்ல. கூப்பிடாத யாரும் இல்ல. ஒருக்கா எங்கட பிள்ளைகள என்ன ஏதுனு பாத்துருவோனு நாங்களும் படாத கஷ்டம் முழுக்க பட்டு, இன்னும் தான் ஒரு முடிவும் இல்லையே. சர்வதேச சமூகத்தை கூப்பிட்டு, கூப்பிட்டு மண்டாடிக் கொண்டிருக்கோம். ஒரு முடிவும் எங்களுக்கு கிடைக்குது இல்லையே…” என கண்ணீர் மல்க செல்வராணி கூறுகின்றார்.

காணாமல் போனோரின் உறவுகளுக்கு நட்டஈடு வழங்குவதாகவும், மரண சான்றிதழ் வழங்குவதாகவும் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு குறித்தும் செல்வராணி கருத்து வெளியிட்டார்.

´´கடைசி வரைக்கும் நான் சாகும் மட்டும் மரண சான்றிதழை நான் வாங்க மாட்டேன். நான் வேண்ட மாட்டேன். எனக்கு பிள்ளைகள் தான் தேவை. என்னன்டு அவங்க மரண சான்றிதழ் தருவாங்க. எங்கட பிள்ளைகள யார் கொண்டு போன, எவர் கொண்டு போன, என்ன நடந்தது என்டு யாராச்சு பார்த்தா எங்களுக்கு மரண சான்றிதழ் தர போறாங்க. பிள்ளைகள வச்சுக் கொண்டு தான் தாறாங்களோ? வைக்காம தாறாங்களோ? யார் கண்டது. மரண சான்றிதழுக்கு நான் கையொப்பம் வைக்க மாட்டேன்” என அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தனது உறவுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தனது வாழ் நாட்களை கடத்திய செல்வராணி, இந்த உலகை விட்டு கடந்த மே ஒன்றாம் திகதி பிரிந்தார்.

அவரது இறுதிக் கிரியைகள் அண்மையில் வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுது.

யுத்த காலத்தில் காணாமல் போன உறவுகளை தேடி இன்றும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், பலர் இந்த போராட்டத்தில் வெற்றி காணாது உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.

காணாமல் போனோர் விவகாரம், இவ்வாறு உயிர் துறப்பவர்களுக்கு இறுதி நொடி வரை விடை கிடைக்காத கேள்வியாகவே அமைகின்றது.