நாட்டின் இன்றைய நிலைக்கான உண்மையான காரணங்களை சகல மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்

377 0

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக நாடுமுழுவதிலும் கிளர்ந்தெழுந்திருக்கும் இளைஞர் யுவதிகளின் எழுச்சிமிகு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன், நாட்டின் சகல சகோதர இன மக்களும் கரிசனை காட்ட வேண்டிய விடயங்களையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

எமது அன்பிற்கினிய தமிழ், சிங்கள, இஸ்லாமிய சகோதர சகோதரர்களே, தோழர்களே,

என்றும் இல்லாதவாறு நாடுபொருளாதார ரீதியாக மிகவும் நெருக்கடியான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதென்பதும் 55பில்லியன் டொலருக்கும் மேற்பட்டகடன் கொடுக்குமதிக்கு நாடு உள்ளாகி இருக்கிறது என்பதும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவிடயமாக இருக்கின்றது. இதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலைகள் பன்மடங்கு கூடியுள்ளதுடன் அதற்கான தட்டுப்பாடுகளும் ஏற்பட்டிருக்கின்றது. வாகனங்களுக்கான எரிபொருள் இல்லாமை, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவை கிடைக்காமை, மிகநீண்ட மின்வெட்டுகள், இதன் காரணமாக சிறுதொழில் தொடக்கம் சகலதும் முடங்கிப் போயிருக்கின்ற சூழ்நிலை, வைத்தியசாலைகளில் சிறுவர் தொடக்கம் முதியோர்வரை பல்வேறுபட்ட மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள் இவ்வாறு மக்கள் வாழமுடியாத ஒருநாடாக இலங்கை மாற்றப்பட்டிருக்கின்றது. இன,மத,குல பேதமில்லாமல், இந்த நாட்டின் சகலமக்களுமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பதினேழுமுறையும் யுத்தம் முடிந்த பின்னர் மூன்று முறையும் கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடியதாக அரசாங்கம் கூறுகின்றது. கடந்த வாரம் அமெரக்கா சென்று சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர், நிதி அமைச்சர் அலிசப்ரி அவர்கள் தனது கலந்துரையாடல் தொடர்பாக பாராளுமன்றத்திற்குத் தெளிவுபடுத்துகின்றபோது, ‘எமது உள்நாட்டு வருமானம் ஏறத்தாழ 1500 பில்லியன் ரூபாக்களாக இருக்கையில், மூவாயிரம் பில்லியன் ரூபாவுக்கு மேல் வரவு-செலவு திட்டம் போடப்பட்டது. வரி அரவீடுகள் குறைக்கப்பட்டன. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் நாட்டை மீட்க முடியாத நிலைமைக்கு நாங்கள் போய்விடுவோம். இதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று கூறியிருக்கின்றார். மேலும், ‘2022 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட வரவு-செலவுத் திட்டம் தவறானது. அதனை மாற்றி புதிய பட்ஜட்டைக் கொண்டுவர வேண்டும்’ என்றும் அதில் வரிகள் அதிகரிக்கப்படும் என்ற விடயத்தையும் அலிசப்ரி கூறியிருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் பேசுகின்றபொழுது, ‘நாடு திவாலாகிவிட்டது’ என்று கூறுகின்றார். மூன்று மாதத்திற்குள் பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடும் என்று அமைச்சர்கள் நாடாளுமன்றத்திலேயே அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.

வரலாற்றில் முதன்முறையாக ஆளுந்தரப்பு அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது தோல்விகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்கள் வாங்கிய கடன்களுடாக இந்த நாட்டை அபிவிருத்தி செய்திருந்தால், இந்த நாடு சொர்க்கபூமியாக மாறியிருக்கும். இன்றுபோல் திவாலாகியிருக்காது. இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்தவர்கள் வாங்கிய கடன்களுக்கு என்ன நடந்தது என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அதுமாத்திரமல்லாமல், வருடாந்த ரீதியாக அவர்கள் வாங்கிய கடன்களும், அந்தக் கடன்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யு சிங்கப்பூர் நாடு உருவாகிய வேளையில், தென்னாசியாவில் மிகவும் செல்வச்செழிப்பு மிக்க நாடாக இலங்கை விளங்கியது. அதன் காரணமாக சிங்கப்பூர் பிரதமராக இருந்த லீ குவான் யூ அவர்கள் ‘சிங்கப்பூரை இலங்கைபோல் ஆக்குவேன்’ என்று சபதம் செய்தார். இன்று சிங்கப்பூர் மிக வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்;கிறது. ஆனால் இலங்கை திவாலான நாடாக மாறியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை பொருளாதார நிபுணர்களும் சமூக அறிவியல் நிபுணர்களும் அரசியல் மேதைகளும் ஏன் இதுவரை கண்டுபிடிக்கவில்லை? என்ற கேள்வி எழுகின்றது.

வேண்டிய கடன்கள் யாவும் கொள்ளையடிக்கப்படுகின்றனவா? அல்லது தவறான பொருளாதார முகாமைத்துவமா? அல்லது நாட்டிலிருக்கக்கூடிய இனங்களுக்குள் ஐக்கியமின்மையை உருவாக்கியமையா? போன்ற கேள்விகளுக்கு விடைகாணப்படவேண்டும்.

இன்று, இலங்கை முழுவதிலும் ‘கோத்தாகோஹோம் – புழவவய புழ ர்ழஅந’ என்ற முழக்கத்துடன் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொழும்பு காலி முகத்திடலிலும் ஏனைய பல இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் ஒன்றுகூடி ஜனாதிபதியை வீட்டிற்குச் செல்லும்படி கோரி போராடி வருகின்றனர். ஜனாதிபதி முறைமை வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.

இலங்கை ஜனாதிபதி முறைமை என்பது ஒரு தனிமனிதன்மேல் அளவு கணக்கில்லாத அதிகாரங்களை ஒப்படைத்து அவரை ஒரு சர்வாதிகாரியாக, தான் விரும்பிய அனைத்தையும் செய்யக்கூடியவராக எமது அரசியல் சாசனம் உருவாக்கி வைத்திருப்பதென்பது இலங்கை நாட்டிற்கோ, ஜனநாயகத்திற்கோ ஆரோக்கியமான ஒருவிடயமல்ல. இப்பொழுதுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதும் ஏற்கனவே 19ஆவது திருத்தத்தின் மூலம் பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை 20ஆவது திருத்தத்தின் மூலம் தனதாக்கிக்கொண்ட ஒரு நடவடிக்கைதான் அவர் மேற்கொண்ட முதல் விடயமாகும். இது எந்தளவுக்கு அவர் அதிகாரமோகம் கொண்டவர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அவ்வளவு அதியுச்ச அதிகாரங்கள் இருந்தபொழுதும், நாட்டின் பொருளாதார சீர்கேடுகளை இவரால் கட்டுப்படுத்த முடியாமை மாத்திரமல்லாமல், தோல்வியுற்ற ஒருநாடாக இலங்கையை மாற்றிய பொறுப்பை கோத்தபாய ராஜபக்சவும் இந்த அரசாங்கமுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கோத்தாவும் முழு அரசாங்கமும் பதவி துறப்பது மாத்திரமல்லாமல் ஜனநாயக விரோதமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை என்பது முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்பதையும் சகோதர இன மக்களுடன் இணைந்து தமிழ் மக்களாகிய நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம்.

அரசாங்கம் இன்று நிலவுகின்ற பொருளாதார வீழ்ச்சிக்கு கொவிட்19ஐயும் ரஷ்ய-யுக்ரேனிய யுத்தத்தையும் காரணம் காட்ட முயற்சிக்கின்றது. ஆனால் அது உண்மையல்ல. மாறாக, அழிவுகரமான ஒரு யுத்தத்திற்காக பலபில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களும், யுத்தவிமானங்களும், யுத்த கப்பல்களும் கொள்வனவு செய்யப்பட்டதுடன், படையினரும் பல இலட்சங்களாக அதிகரிக்கப்பட்டனர். மாறிமாறிவந்த சகல அரசாங்கங்களும் தாங்களே உருவாக்கிய இனவிரோதச் செயற்பாட்டை உணர்ந்து, பேசித் தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்வுகாணப் புறப்பட்டதனால் பல பில்லியன்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டதுடன், ஊழல் மிக்கதாகவும் திறைசேரியையும் மத்திய வங்கியையும் கொள்ளை அடித்தமையும், இந்த நாட்டின் பன்முகத்தன்மைக்கேற்ற பொருளாதாரத் திட்டங்கள் இன்மையும் இன்று நாம் இந்த அழிவு நிலைக்கு வந்தமைக்கான காரணம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எம்மைப்போலவே நீங்களும் இதனை உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.

இன்று எந்த பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் உடனடியாக டொலர் பற்றாக்குறை என்று அரசாங்கத்தால் காரணம் காட்டப்படுகின்றது. அந்த டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் என அமைச்சர்கள் கடன் கேட்டு யாத்திரை போகின்றனர். நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையவேண்டுமாக இருந்தால், இந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். ஆனால் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாததன் காரணமாக அந்த அரசியல் ஸ்திரத்தன்மை இன்னமும் இலங்கையில் ஏற்படாமலேயே இருக்கின்றது. மறுபுறத்தில், ஒரு மிகவலுவான புலம்பெயர் தமிழர்கள் பல்வேறுபட்ட உலக நாடுகளில் வாழ்கின்றார்கள். அவர்கள் இந்த நாட்டில் பலகோடி டொலர்களை முதலீடு செய்யவும் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் இந்த நாட்டின் குடிமக்களில் ஒருபகுதியினராகிய பூர்வீகத் தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமது மொழி, கலாசாரம், பண்பாடு, அடையாளம் பாதுகாக்கப்படவேண்டுமென்று போராடி வந்தபொழுதும்கூட, அவை இன்றுவரை தொடர்ந்தும் மறுதலிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. தமது நாட்டு குடிமக்களை சமத்துவமாக மதித்து இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாத அரசாங்கத்தில் நாங்கள் என்ன நம்பி;கையில் இலங்கையில் முதலீடு செய்வது என்ற கேள்வியே புலம்பெயர் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

அரச தரப்பும் எதிர்த்தரப்பும் கடன்களை மறுசீரமைப்பது பற்றியும்;, புதிய கடன்கள் வாங்குவது பற்றி மாத்திரமே பேசுகின்றனர். இது மேலும் மேலும் இலங்கையின் கடன்சுமையை அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். ஆகவே இலங்கையில் அந்நியச் செலவாணிகளை உள்ளீர்க்க வேண்டுமாக இருந்தால், இலங்கைக்குள் மிக அதிகளவிலான மூலதனங்களை உருவாக்க வேண்டும். அந்த மூலதனங்கள் என்பன வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதாகவும், ஏற்றுமதிசார் உற்பத்திகளை அதிகரிப்பதாகவும் சுற்றுலாத்துறையை நவீனமயப்படுத்தி விஸ்தரிப்பதாகவும் அமையவேண்டும்.

இந்தநாட்டின் ‘அரசியல் முறைமை– Pழடவைiஉயட ளுலளவநஅ’ மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் நீங்கள் முன்வைத்துள்ளீர்கள். நாங்களும் அதனுடன் ஒன்றுபடுகின்றோம். ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது மாத்திரம் இந்த நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் முறைமையையும் மாற்றிவிடாது. இலங்கையின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டும், இலங்கையின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டும் அதற்கு இலங்கை குடிமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டக்கூடிய வகையில் அவர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதனூடாக பாரிய பொருளாதார பாய்ச்சல் ஒன்றை ஏற்படுத்த முடியுமென்பது எமது கருத்தாகும். அதற்கேற்ற வகையில் மிகவும் பிற்போக்குத்தனமான ஒற்றையாட்சிமுறை என்பது மாற்றப்பட்டு அனைத்து மக்களும் சமத்துவமாக வாழக்கூடியதும், தமது பிரதேச அபிவிருத்திகளை தாமேசெய்து கொள்வதற்கான ஒருசமஷ்டி அமைப்புமுறை இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதென நாங்கள் கருதுகிறோம்.

அந்தவகையில், மேற்கண்ட எமது ஆலோசனைகளை உங்களது போராட்டங்களில் நீங்கள் முன்னிறுத்துவீர்களாக இருந்தால், நாங்கள் மிகவும் இறுக்கமாக ஒன்றித்துப் பயணிக்கலாம் என்பதுடன், அடுத்த சிலவருடங்களிலேயே எமது அரசியல் பொருளாதார இலக்குகளை எய்தக்கூடியதாக இருக்கும்.

ஒட்டுமொத்த நாட்டின் நன்மைகருதி, நாங்கள் முன்வைக்கும் இவ்வாலோசனைகள் இனவாதக் கருத்துகளாக சிலசமயங்களில் வியாக்கியானப்படுத்தப்படலாம். ஆனால், நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பயணிக்கும் யாரும் அதற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடிய சகலவற்றையும் தகர்த்தெறியவே யோசிப்பார்கள். ஆகவே இது இனவாதக் கருத்துகள் இல்லையென்று போராட்டக்களத்தில் உள்ள நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறோம்.

யுத்தத்திற்குப் பிற்பாடு பல்வேறு வழிமுறைகளில் தமிழ் மக்கள் மேலும் மேலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைப் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழர் பிரதிநிதிகளும் தமிழர் தரப்புகளும் நேரடியாகவும் போராட்ட வழிமுறைகளினூடாகவும் மீண்டும் மீண்டும் கூறியும் இலங்கை அரசாங்கம் அதற்குச் செவிசாய்க்க மறுத்து வருவதுடன், எண்ணிக்கையில் பெரும்பான்மை மக்களான சிங்களமக்களாகிய நீங்களும்கூட இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்பது எம்மைக் கவலையடையச் செய்துள்ளது.

அன்பிற்கினிய எமது சிங்கள சகோதர சகோதரிகளே, கீழ்வரும் விடயங்களை நீங்கள் மிகவும் கரிசனையுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

1. பெற்றோர் உறவினர்கள் முன்பாக கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான நீதியான விசாரணை ஒன்றை நடாத்தும்படி நாங்கள் கோரியும்கூட அது இன்றுவரை மறுதலிக்கப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள், தந்தையர்கள், உறவினர்கள் 1800 நாட்களைக் கடந்தும் போராடிக்கொண்டிருக்கின்ற வேளையிலும், தமது பிள்ளைகளைத் தேடியே சுமார் 200க்கும் மேற்பட்ட தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ள நிலையிலும் இதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதென்பது ஒருவேதனைக்குரிய விடயமாகும்.

2. யுத்தம் நடந்தகாலத்தில் ஆயுதப் படையினரால் பல்லாயிரம் ஏக்கர் கணக்கான பொதுமக்களின் காணிகள் பலாத்காரமாகப் பறித்தெடுக்கப்பட்டது. யுத்தம் முடிந்து 13வருடங்கள் கடந்திருக்கின்ற சூழ்நிலையிலும் காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பதுடன், இராணுவத்தினரும் கடற்படையினரும் தமது முகாம்களுக்காக புதியபுதிய காணிகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இவை ஒருபுறமிருக்க, வனவள பாதுகாப்பு, வனஜீவராசிகள் சரணாலயம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தொல்பொருள் பகுதிகள் எனதமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் மேற்கண்ட அரச திணைக்களங்களால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. இவற்றை உடன் நிறுத்துமாறு கோரியும் எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் விவசாயம் செய்துபிழைத்த பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் காணி, நிலங்கள் இல்லாமல் நடுத்தெருவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள்மீது விழுந்து கொண்டிருக்கின்ற பாரதூரமான அடி இதுவாகும்.

3. பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது தற்காலிக ஏற்பாட்டில் கொண்டுவரப்பட்ட போதிலும்கூட, 45வருடகாலமாக அது நடைமுறையில் இருப்பதுடன், இதனால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டும். இந்த காட்டுமிராண்டித்தனமான சட்டம் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் தொடக்கம் பல்வேறுபட்ட நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசாங்கம் தனக்கு ஒத்துவராதவரை, பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் கேள்வி நியாயம் இல்லாமல் அவர்களைக் கைது செய்வதற்கும் தடுத்து வைத்திருப்பதற்காகவுமே இந்தக் காட்டுமிராண்டித் தனமான சட்டத்தை வைத்திருக்கிறது. உங்களில் பலர் இந்த சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று கூறிவருவதையும் நாங்கள் அறிவோம். இதனை முழுமையாக அகற்றும்வரை உரத்துக் குரல் கொடுக்கும்படியும் அரசாங்கத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் இதனை அழுத்தம் திருத்தமாகக் கூறும்படியும் உங்களை நாங்கள் வேண்டுகிறோம்.

4. இதே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ், கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகள் பல வருடங்களாக எந்தவித விசாரணைகளும் இன்றி, தடுப்புக்காவல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். மனிதகுலத்திற்கு எதிரான இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களையும் விடுவிக்கவேண்டும் என்பதையும் அதற்கு நீங்களும் எம்முடன் இணைந்து போராடவேண்டும் என்பதையும் நாங்கள் உங்களிடம் கோருகின்றோம்.

5. இலங்கையின் இராணுவம் என்பது உலகின் பதினான்காவது பெரிய இராணுவமாக இப்பொழுது சொல்லப்படுகின்றது. மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரையும் இன்னும் கடற்படை, விமானப்படையையும் கொண்டதாக இலங்கை படையினர் இருக்கின்றனர். இரண்டுகோடியே இரண்டரை இலட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த தீவிற்கு இவ்வளவு பிரமான்டமான படையினரும் அவர்களுக்கான முகாம்களும், ஊதியங்களும், வாகனச் செலவீனங்களுமாக இலங்கையின் தேசிய வருமானத்தில் ஏறத்தாழ கால்பகுதி இன்றும் செலவு செய்யப்படுகின்றது. யுத்தம் முடிந்து13வருடங்கள் ஆகியிருக்கக்கூடிய சூழ்நிலையில் படிப்படியாக இவற்றைக் குறைத்து செலவீனங்களைக் குறைக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுடன் படையினருக்கான செலவீனங்களும் அதிகரிக்கப்படுகின்றது. உற்பத்திசார் அபிவிருத்தி இல்லாத ஒருதுறைக்கு நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் தொகையை ஒதுக்குவதென்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வளவு குந்தகமானது என்பதை இனியாவது நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.