புகையிரதசேவைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள்

173 0

புகையிரத சேவைக்கு குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை பயங்கரவாதிகள் என கருதி கைதுசெய்யப்போவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக தெரிவித்தார்.

புகையிரதசேவைக்கு குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகள் என்ற அடிப்படையில் கைதுசெய்வதற்கான உத்தரவினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பணிபுறக்கணிப்பு எவ்வாறானதாகயிருந்தாலும், புகையிரதசேவைகளை தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவராவது புகையிரதசேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யவேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேள்வி- புகையிரத நிலையஅதிபர்களே புகையிரதங்களிற்கான சமிக்ஞைகளை வழங்குபவர்கள் -அவர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டால் சமிக்ஞைகள் இல்லாமல் புகையிரதங்கள் ஓட முடியாது- அவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு செயற்படுவது?

பதில்- குழப்பங்கள் எவ்வாறானதாகயிருந்தாலும் புகையிரத நிலைய அதிபர்களே சமிக்ஞைகளை வழங்குபவர்கள்
இவ்வாறான பணிப்புறக்கணிப்பினை அனுமதிக்க முடியாது- இதனை உறுதியாக ஊடகங்களிற்கு தெரிவியுங்கள் – நாங்கள் உறுதியாக சொல்கின்றோம்- மக்களும் அவ்வாறே கருதினார்கள்,ஆனால் ஒரு அரசாங்கமாக நாங்கள் மிகவும் பொறுமையுடன் உள்ளோம்.

இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து நான் முடிவுகளை எடுத்துள்ளேன்-யார் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டாலும் அவர்கள் இறுதி விளைவை சந்திப்பார்கள்.

மக்களே அரசாங்கத்தினை தெரிவு செய்தார்கள்,மக்களிற்கு நலன்புரி சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் கடமை- அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெறுபவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.