பெயர்ப் பட்டியலில் உள்ளவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை

40 0

அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்த தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான பெயர்ப் பட்டியலில் உள்ளவர்கள், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அது முழுக்க அரசியல் நோக்கத்துக்காக வெளியிடப்பட்ட ஒன்றெனவும் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் உள்ளவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை முடிந்தால் காட்டுங்களெனவும், அவர் அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார்.

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் காட்டி, வெளிநாடுகளில் இருந்து பாரிய நிதிகளைப் பெற்று, தென் பகுதியையே அரசாங்கம் அபிவிருத்தி செய்ததெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், ஆனால் யுத்தத்தால் அழிந்த வடக்கு, கிழக்கை மேம்படுத்த, எந்தவிதமான அக்கறைகளையும் அரசாங்கம் காட்டுவதாக இல்லை என்றார்.

இந்நிலையில், அரசாங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எவரும், கடந்த 10 வருடங்களில் எந்தவிதமான பயங்கரவாதச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்த கஜேந்திரன் எம்.பி, அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுகிறார்கள் என்ற காரணத்தினாலேயே, அவர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.