தாயகம் திரும்புவதற்கு கப்பலை எதிர்பார்த்திருக்கும் ஈழ அகதிகள்

328 0

tamil-refugees-in-tamilnaduதமிழ்நாட்டு அகதிமுகாம்களில் வசித்துவரும் 2508 ஈழ அகதிகள் தாயகம் திரும்புவதற்காக இந்திய அரசாங்கத்தின் கப்பல்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளின் இந்தப்பட்டியல் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், கையளிக்கப்பட்டுள்ளதாக ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனர் எஸ்.சி.சந்திரகாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் சுஸ்மா சுவராஜை கொழும்பில் சந்தித்தபோது, அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தாயகம் திரும்ப விரும்பும் அகதிளின் பெயர் விபரங்கள் அடங்கிய இந்தப் பட்டியல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு கட்டணமின்றி கப்பல் வசதிகளை செய்து கொடுக்கத் தயார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உறுதியளித்திருந்தார்.

தாயகம் திரும்ப விரும்பும் அகதிகள் தொடர்பான பட்டியலை, தமிழ் நாட்டு அரசாங்கம், சிறீலங்கா அரசாங்கம், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு ஆளுநர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலின் அடிப்படையில், தாயகம் திரும்ப விரும்புவோரில் மன்னாரைச் சேர்ந்த 745பேரும், திருகோணமலையைச் சேர்ந்த 654பேரும், வவுனியாவைச் சேர்ந்த 574பேரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 236பேரும், கிளிநொச்சியைச் சேர்ந்த 148 பேரும், மட்டக்களப்பைச் சேர்ந்த 117பேரும், கொழும்பைச் சேர்ந்த 6பேரும், கண்டியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

இவர்களை, தமிழ்நாட்டின் கடலூர், இராமேஸ்வரம் துறைமுகங்களிலிருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு தலா 500 பேர்படி அனுப்பிவைக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.