5 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும்

263 0

இன்று இரவு நாட்டின் பல பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக அடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் நாளைய தினத்திற்கு பின்னர் நிலவும் காலநிலை மாற்றமடையக்கூடும் என அந்த நிலையத்தின்  பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகளவான மழை பல பிரதேசங்களில் பெய்துள்ள நிலையில், அதிக மழை வீழச்சி இரத்தினபுரி – நிவிதிகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அங்கு 123.8 மில்லி மீட்டர் மழை வீழச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, குக்லேகங்கையின் இரண்டு வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதனால், இங்கிரிய, அகலவத்த, பதுரலிய, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர முதலான பிரதேச மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அதிக மழைக் காரணமாக நில்வளா கங்கை மற்றும் கிங் கங்கையினதும் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அந்த நிலையம் கோரியுள்ளது.

இதனுடன், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, கேகாலை இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக மழை பெய்வதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனுடன் பெய்து வரும் பலத்த மழைக் காரணமாக காலி, இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளில்  சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Leave a comment