தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி எங்களால் முன்னெடுக்கப்படும் விடுதலைக்காந்தள் எனும் போட்டி நிகழ்வானது மூன்றாவது ஆண்டாக 08.11.25, 09.11.25 சனி, ஞாயிறு ஆகிய இருதினங்களும் டோட்முன்ட் நகரில் முன்னெடுக்கப்பட்டது. நடனங்கள், வாத்திய இசை, பாடல்கள் என எழுச்சியாக நடாத்தப்பட்டது. தொடக்க நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தெடர்ந்து இனத்தின் விடுதலைக்காக சுகந்திர வரலாற்றின் பக்கங்களை தமது குருதியால் தாய் மண்ணை நனைத்த மாவீரர்களின் புனிதமான மாதமான கார்த்திகையில் மண்மீட்புப் போரில் மரணித்த தியாகச் சுடர்களை நெஞ்சிலே நிறுத்தி ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தெடர்ந்து மங்கல விளக்கேற்றி வைத்து தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும், இலங்கை இந்தியப்படைகளாலும் இரண்டகர்களாலும் கொல்லப்பட்ட பொதுமக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. நாம் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த எமது மண்ணில் வாழாத புலத்தில் வாழும் இளம்தலைமுறைக்கு விடுதலைக்காக போராடிய மறவர்களின் போராட்ட வடிவங்களை பாடலாக நடனமாக வாத்திய இசையாக அவர்களின் மனங்களில் பதியவைப்பதை ஆழான குறிக்கோளாக்கொண்டு யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பால் விடுதலைக்காந்தள் எனும் போட்டி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. போராட்ட வடிவங்கள் மாறலாம், போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை என்ற சிந்தனைக்கேற்ப நாம் அனைவரும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டிய காலமிது என்பதற்கமைய எம்மால் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்ட பாடலுக்கு வரவேற்பு நடனமாடியது பார்வையாளர்களின் வரவேற்பைப்பெற்றது. வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து விடுதலைக்காந்தள் போட்டி நிகழ்வுகள் யாவும் திட்டமிட்டபடி ஆரம்பமாகியது.
விடுதலைக்காந்தள் போட்டி நிகழ்வில் விடுதலைப் பாடல், விடுதலை நடனம், விடுதலைப்பாடல்களை இசைக்கருவியில் மீட்டல் என்ற வகையில் போட்டிகள் நடைபெற்றன. கலைஞர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை அரங்கில் நிரூபித்தனர். விடுதலைக்காந்தள் போட்டியில் பங்குபற்றிய ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் பங்குபற்றியமைக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.
நிகழ்வுகள் யாவும் மிகச்சிறப்பாகவும் நடுநிலையாகவும் நடைபெற்றது.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பதை ஏற்று, தனிப் போட்டிகளில் போட்டியிட்டு முதலாம் இடத்தைப்பெற்ற போட்டியாளருக்கு விடுதலைக்காந்தள் எனும் மாபெரும் விருதும் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதுடன் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற போட்டியாளர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.குழு போட்டிகளில் போட்டியிட்டு முதல் மூன்று இடங்களைப்பெற்ற குழுவினரும் மதிப்பளிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் எனும் பாடலுடன் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ எனும் தாரக மந்திரத்துடன் விடுதலைக்காந்தள் 2025 நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தன.




























































































































































































































