நீதிக்கெதிரான மொழிச் சதி!

263 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது.

அங்கு சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சிறிலங்காவுக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவேஇனப்பிரச்சினை‘ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘மோதல்‘ எனும் பதம் சேர்க்கப்பட்டதாக இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரித்தனியா தெரிவித்துள்ளது.

இனப்பிரச்சினை’ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘மோதல்’ எனும் பதம் பயன்படுத்தப்படுமானால் தமிழ் இனத்திற்கு உலக அரங்கில் மீண்டும் அரசியல்சார்ந்த நீதி மறுக்கப்படும் அநீதி செயலாகும்.

‘இனப்பிரச்சினை’ என்ற சொல் மற்றும் ‘மோதல்’ என்ற சொல் இரண்டும் ஒரே சூழ்நிலையில் பயன்படுத்தப்படுவது போல தோன்றினாலும் அவற்றின் அர்த்தமும் பயன்பாட்டும் வெகுவாக மாறுபடுகின்றன.

‘இனப்பிரச்சினை’ என்பது ஒரு சமூகத்தில் நிலவும் ஆழமான வரலாற்று சார்ந்த அடக்குமுறையை குறிக்கிறது. ஆனால் மோதல் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழும் சண்டையை குறிக்கிறது. எனவே “இனப்பிரச்சனை” என்பதை “மோதல்” என மாற்றுவது அதன் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் குறைத்து அதன் கருத்தை மேம்படாமல் துல்லியத்தை இழக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.

இந்தச் சொற்பத மாற்றம் வெறும் மொழிமாற்றம் அல்ல; வரலாற்றை மாற்றும் முயற்சி.

“இனப்பிரச்சனை” என்பது தமிழ் இனத்தின் மீதான நீண்டகால , மனித உரிமை மீறல்களையும், இனஅழிப்புத் திட்டங்களையும் குறிக்கும். இது ஓர் இனத்தின் அடையாளம், உரிமை, வாழ்வுரிமை ஆகியவை மறுக்கப்பட்ட வரலாற்றைக் கூறுகிறது.

“இனப்பிரச்சனை” என்ற பதத்தை   “மோதல்” என மாற்றுவது, அடக்குமுறைகளை “இருதரப்புகளுக்கிடையேயான சமமான முரண்பாடு” என்ற தவறான விளக்கத்திற்கு வழிவகுக்கும். இது பாதிக்கப்பட்டவரை குற்றவாளியாக வும், அடக்குவோருக்கு பாதுகாப்பாகவும், உலகத் தரத்தில் சட்டப்பூர்வ விசாரணைகளை தவிர்க்கும் வழியாக அமைந்துவிடும்.

சொற்பதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும் அவை பிரதிபலிக்கும் பொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மற்றும் ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒரு சொல் மட்டுமே அரசியல் தாக்கங்களை நிர்ணயிக்க முடியும் .இனப்பிரச்சினை எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டால் சிறிலங்கா மீது விசாரணைகள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் இனப்படுகொலை .மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.

மீண்டும் அப்பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என உறுதியாகத் தெரியாத பின்னணியில் அப்பிரேரணை எதிர்வரும் 6 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ளது என அறியமுடிகிறது.

எனவே, இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் ,தமிழ் தேசிய அரசியல்வாதிகள் , மாணவர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் .புலம்பெயர் புத்திஜீவிகள் கூட்டாக இணைந்து அறிக்கைகள், கண்டனங்களை வெளியிட வேண்டும்.

அவர்களது கண்டன அறிக்கையில் பின்வரும் விடயங்களை வலியுறுத்தி விரைவாக வெளியிடவேண்டும்.

1) ஐ.நா., அதன் உறுப்புநாடுகள், மற்றும் மனித உரிமை பேரவையின் ஆவணங்களில்,“Ethnic Conflict” என்ற சொல் துல்லியமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

2) “Clash”, “internal conflict” போன்ற மென்மையான சொற்கள், அரசியலுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட பதங்கள் என்பதையும், அவை தூண்டுதலாகச் செயற்படக்கூடியதாக இருப்பதையும் உணர வேண்டும்.

3) தமிழ் இனத்தின் வரலாறும், வலியும், எதிர்பார்ப்பும் அனைத்தும் அழிக்கப்படக்கூடிய சாத்தியமுள்ள சொற்பத மாற்றங்களை  எதிர்க்கிறோம்.

உலக நீதி ஒழுங்கு இருந்தாலும், அது பலவீனருக்கான கவசம் அல்ல; சக்திவாய்ந்த நாடுகளின் சதி. தமிழர் அதற்குள் சிக்கிக் கொண்டார்கள் என்பதே நிஜம்.