மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்

222 0

‘காற்றாலைத்திட்டத்தினாலும், கனிய மணலுக்கான கேள்வியும் மன்னாரை சுற்றுச்சூழல் பாதிக்கவல்ல போராபத்துக்குள் தள்ளிவிடும் நிலையை தோற்றுவித்துள்ளது’

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித்திட்டம், இலங்கையின் வலுசக்தித்தேவையை நோக்கிய முக்கியமான படியாகக் கருதப்பட்டாலும், அது மன்னார் தீவுப் பகுதியின் பூகோள முக்கியத்துவம், அதியுயர் உணர்திறன்கொண்ட உயிர்ப்பல்வகைமைச் சுற்றுச்சூழல், மன்னார் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான சர்ச்சைகளின் மையமாக உருவெடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே 30காற்றாலை கோபுரங்கள் நிறுவப்பட்ட நிலையில், இத்திட்டத்தை மேலும் விரிவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் அபாயங்கள் குறித்த நிபுணர்களின் எச்சரிக்கைகளையும் வலுவாகவே பெற்றிருக்கின்றன.

முன்னதாக, இந்தியாவின் அதானி நிறுவனம் இப்பகுதியில் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலைத் திட்டத்திலிருந்து விலகிய போதும், உள்ளுர் மக்களின் கவலைகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார் முதலீட்டாளர்களின் துணையுடன் இலங்கை மின்சார சபை அத்திட்டத்தை இடைநிறுத்தாமல் நகர்த்துவது, மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் மக்களின் எதிர்ப்பானது, வெறும் மின் உற்பத்திக்கு எதிரானது அல்ல. அந்தப்போராட்டம் அந்த மக்கள் தங்கள் பூர்வீக நிலம், வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கானவொரு பரந்துபட்ட போராட்டமாகும்.

மன்னார் பிராந்தியம் புவியியல் ரீதியாகவும், கனிம வளங்கள் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு இல்மனைட் உட்படப் பல்வேறு வகையான கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தக் கனிமங்கள் சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானவை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா போன்ற நிபுணர்கள், மன்னாரில் இல்மனைட்டை மிகக் குறைந்த செலவில் அகழ்ந்தெடுக்க முடியும் என்ற நிலை, இங்கு கனிம மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடுகிறார்.

மன்னார் நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைந்த அளவில் இருப்பதால், காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காகவோ அல்லது கனிமங்களை அகழ்வதற்காகவோ நிலத்தை ஆழமாகத் தோண்டுவது, நில மட்டத்தை மேலும் தாழ்த்தி, இப்பிராந்தியம் சில வருடங்களிலேயே கடல் நீருக்குள் மூழ்கும் பாரிய அபாயம் உள்ளதாகப் புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உதாரணமாக, ஒரு காற்றாலை அமைப்பதற்கு 3000 பைகள் மண் அகழ்ந்து அகற்றப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுவது, இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. குhற்றாலைக் கோபுரங்களை நாட்டுவதற்காக 25அடி வரை தோண்டி, கொங்கிரீட் மற்றும் மண்ணைக் கொட்டி மூடுவது, கரையோரங்களில் கொங்கிரீட் போடுவதனால் மழை நீர் வெளியேறுவது தடுக்கப்படுவது போன்ற கட்டுமானச் செயற்பாடுகள், மன்னாரின் பூகோள சமநிலையைச் சீர்குலைத்து, எதிர்காலத்தில் பாரிய இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.

சுற்றுச்சூழல் ரீதியாக பார்க்கின்றபோது, மன்னார் வகிபாகம்  சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. மிகப் பெறுமதியானது. யுனெஸ்கோவே அங்கீகாரத்தினையும் அளித்துள்ளது. இங்குள்ள சூழலியல் வளங்கள், இலங்கைக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான வெளிநாட்டு வலசைப் பறவைகளின் முக்கிய நுழைவாயிலாகவும், இனப்பெருக்க மையமாகவும் உள்ளன.

வலசைப் பறவைகள் இலங்கையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து, மீண்டும் குஞ்சுகளுடன் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் இந்த அரிய பறவைகளுக்கு, உயரமான காற்றாலை கோபுரங்களும் அவற்றின் சுழலும் இறக்கைகளும் நேரடியான அச்சுறுத்தலாக அமைகின்றன என்று சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன், காற்றாலைத் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான பனை மரங்கள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது, உள்ளுர் இயற்கைக்குப் பேரிழப்பாக உள்ளது. இச்சூழலியல் பாதிப்புகளை முழுமையாக ஆராயும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் தரப்பிலிருந்து வலுப்பெற்றுள்ளது.

காற்றாலைகள் அமைக்கப்பட்டதன் சமூகப் பொருளாதார விளைவுகள் மன்னார் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளன. இப்பகுதி மக்கள் பிரதானமாக மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்கின்றனர். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பின்னர், முன்னர் இருந்ததைக் காட்டிலும் மீன்களின் வரத்து மிகக் குறைவாகி, தங்கள் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதாகக் கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தாழ்வுபாடு போன்ற கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் காற்றாலைகள் அமைக்கப்பட்டிருப்பது, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மேலும், நிலத்தில் நீர் தேங்கி நிற்கும் காலம் நீடித்துள்ளதால், மழைக்காலத்திற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு கிராமப்புறங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்களின் எதிர்ப்பானது, திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை குறித்த தீவிரமான விமர்சனமாகவும் வெளிப்படுகிறது. மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை போன்ற அமைப்புகள், இத்தகைய பாரிய திட்டங்களால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் முறையான கலந்துரையாடல் நடத்தப்படும் வரை அத்திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம், மக்களின் உணர்வுகளையும் பாதிப்புகளையும் புறக்கணித்து, அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகத் தீர்மானங்களை எடுப்பது ‘ஜனநாயக முறைமைக்கு உகந்ததல்ல’ என்றும், இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

இறுதி முடிவு எடுப்பதற்கு முன் தம்முடன் கலந்துரையாடியிருக்க வேண்டியது மக்களாட்சித் தத்துவத்தின் இலக்கணம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். மக்களின் பங்கேற்பின்றித் திட்டங்களை முன்னெடுப்பது என்பது, கடந்தகால நிர்வாகங்களின் விலக்களிக்கப்பட்ட ஆட்சி வடிவத்தின் நீட்சியே என்றும், இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மன்னார் மக்களின் கோரிக்கை, வெறும் காற்றாலைத் திட்டத்தை நிறுத்துவதல்ல. மாறாக, தங்கள் வாழ்வாதார உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, ஒரு சமநிலையான தீர்மானத்தை எட்டுவதே ஆகும். கனிம மண் அகழ்வுத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மக்களின் கோபமும் வலியும் நியாயமானது என்பதைப் புரிந்து கொள்ள அரசு தவறுவதாகவே இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன.

எனவே, மன்னார் மக்களின் கோரிக்கை காற்றாலைத் திட்டத்தை முழுவதுமாக நிறுத்துவதல்ல் மாறாக தங்கள் வாழ்வையும், நிலத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் வகையில் சமூக சமநீதி மற்றும் மக்கள் பங்கேற்புடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.

ஆனால் இந்தநிலைப்பாட்டுக்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக காற்றாலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தான்.

இந்த செயற்றிட்டத்தினை இடைநிறுத்துவதென்ற எண்ணமே இல்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்களை மீளப்பரிசீலிக்கலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாக இருந்தாலும், அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு முன்னதாக தாங்கள் பதவிக்கு வந்தவுடன் மன்னார் காற்றாலைத்திட்டத்தினை நிறுத்துவோம் என்ற வாக்குறுதியை முழுமையாக மறந்துவிட்டது. அப்படியென்றால் ஒரேவழி வெகுஜனப் போராட்டம் தீவிரமயப்படுத்துவது தான்.