இலங்கையால் விடுவிக்கப்பட்ட படகுகள் இராமேஸ்வரத்தில்

308 0

இலங்கையிலிருந்து முதல் கட்டமாக விடுவிக்கப்பட்ட ஆறு படகுகள், சனிக்கிழமை இராமேசுவரம் சென்றடைந்துள்ளன.

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 42 படகுகளில், முதல் கட்டமாக இராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஏழு படகுகளை மீட்க, செப்டம்பர் 27ம் திகதி மண்டபத்திலிருந்து 53 மீனவர்கள் இலங்கை வந்தனர்.

இதன்படி, காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த படகுகளை மீட்புக் குழு மீனவர்கள் சீரமைத்து மீட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், எந்த படகையும் இயக்க முடியவில்லை. இதனால், 7 படகுகளையும் கயிறு கட்டி இராமேசுவரம் பகுதிக்கு இழுத்து வந்தனர்.

சிறிது தொலைவு வந்தவுடன், மண்டபத்தைச் சேர்ந்த மெக்கல் என்பவரது படகு கடலில் மூழ்கியது. அதையடுத்து, மீண்டும் அந்தப் படகை காரைநகர் துறைமுகத்துக்கு இலங்கைக் கடற்படையினர் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, ஜெபதோட்டம், ஜேசு அருளானந்தம், நிஷந்தன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டவர்களின் 6 படகுகளை, இராமேசுவரம் துறைமுகத்துக்கு சனிக்கிழமை இழுத்து வந்தனர். படகுகளை மீன்வளத் துறை, சுங்கத் துறை மற்றும் இந்திய கடலோரக் காவல் படையினர், கடலோர காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இது குறித்து மீனவ சங்கத் தலைவர்கள் ஜேசுராஜ் மற்றும் சகாயம் கூட்டாகத் தெரிவித்தது,

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 180க்கும் மேற்பட்ட படகுகள், இலங்கை துறைமுகங்களில் இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி கடலில் மூழ்கிக் கிடக்கின்றன.

இதனால், மீண்டும் இந்தப் படகுகளை இயக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் ரூ. 5 இலட்சம் முதல் ரூ. 8 இலட்சம் (இந்திய ரூபா) வரை செலவாகும்.

ஏற்கனவே படகுகளை இழந்து சிரமப்பட்டு வந்த மீனவர்கள் தற்போது படகுகளை சீரமைக்க முடியாததால், மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்கி படகு உரிமையாளரை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Leave a comment