ஒரு நாட்டின் அதிபர் அதன் அண்டை நாட்டால் சிறைப்பிடிக்கப்படுகிறார். தங்கள் நாட்டின் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதை கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றனர். ஒரு சிலர் அச்சத்தோடு வேடிக்கைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் புதிய நம்பிக்கையுடன் அதை வரவேற்கின்றனர்.
இந்தக் கலவையான மனநிலை வெனிசுலா நிலவரம் மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழும் வெனிசுலா நாட்டவர் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற தேசங்களில் வசிக்கும் வெனிசுலா மக்களிடமும் பிரதிபலிப்பதை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
இத்தனைக்கும் வெனிசுலா ஏதோ வறண்ட, பட்டினிப் பிணி பிடித்த தேசம் கூட அல்ல. உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 18% வெனிசுலாவில் உள்ளது. ஆனாலும் ஏன் அந்நாட்டு மக்கள் தங்கள் அதிபர் சிறைப்பிடிக்கப்பட்ட நிகழ்வைக் கொண்டாடினர் என்பது குறித்து அறிய முற்பட்டபோது வெனிசுலா பற்றி பல சுவாரஸ்யத் தகவல்களும், சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவருக்கு முந்தைய அதிபர் ஹியூகோ சாவேஸ் குறித்து பல விஷயங்களும் தெரியவந்தன.
சாவேஸ் முதல் மதுரோ வரை… – லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலாவின் வரலாறு கவனிக்கத்தக்கது. வேளாண் பொருளாதாரம் கொண்ட ஒரு தேசம் நகரமயமாகி, வேகமாக வளர்ச்சி கண்ட விதமே அதற்குக் காரணம்.
1959-ல் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலா ஒரு ஸ்திரமான அரசைக் கொண்டதாக இருந்தது. அங்கு உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல்கள் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் வெனிசுலா அதன் மூலம் செழிப்படையத் தொடங்கியது.
ஆனால் 21-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெனிசுலா வேறொரு அரசியல் பாதையில் செல்லத் தொடங்கியது. அப்போது அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸின் ஆட்சி கவனம் பெறலானது.
1999-ல் வெனிசுலாவின் அதிபரான ஹியூகோ சாவேஸ், ‘பொலிவிரியன் புரட்சி’ ( Bolivirian Revolution) என்ற பெயரில் சோசலிஸக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். நாட்டின் பெயரைக் கூட வெனிசுலா பொலிவிரியன் குடியரசு என்று மாற்றினார்.
பொலிவர் என்பவர் சாவேஸின் கொள்கை குரு. அவருக்கு மாவோ, ஸ்டாலின், லெனின் மீதும் கூட ஈடுபாடு இருந்தது. சோசலிஸக் கொள்கைகளைப் புகுத்தி வெனிசுலா அரசியல் சாசனத்தை மாற்றியமைத்தார். அதுவரை அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கொட்டமடித்த ஆட்சியாளர்களை ஒடுக்குவேன் என்று சூளுரைத்தே ஆட்சிக்கு வந்திருந்ததால், மக்கள் பணிகளில் ஆர்வம் காட்டினார்.
எண்ணெய் வளம் இருந்தும் ஏன் பொருளாதாரத் தேக்கநிலை என்று சிந்தித்து, கச்சா எண்ணெய் விலையை அதிகரித்தார் சாவேஸ். பெட்ரோலியத்தை நாட்டுடைமையாக்கினார். இயற்கை வளமாக பெட்ரோலியத்தை வைத்து தனியார் நிறுவனங்கள் செல்வத்தில் மிதப்பது தடைபட்டது. அவரின் கட்டுப்பாடுகளால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்திருந்தது. சில பெருஞ் செல்வந்தர்களும் எரிசலில் இருந்தனர். சாவேஸுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கியது.
ஆனாலும் எதைப் பற்றியும் சட்டை செய்யாமல், அவர் தொடர்ந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். உள்நாட்டில் மட்டுமல்ல ஐ.நா. அவையிலும் கூட அமெரிக்காவை, அதன் அதிபரை சரமாரியாக சர்வசாதாரணமாக விமர்சித்து கர்ஜித்தார். ஆனாலும் அவருடைய ஆட்சியில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அதற்கு அவரது கொள்கைகளே காரணம் என்று பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்தது.
இந்நிலையில், 2013-ம் ஆண்டு சாவேஸ் உயிரிழந்தார். அதன்பின்னர் வெனிசுலாவில் ஸ்திரமான ஆட்சி அமையவில்லை.
2018-ம் ஆண்டு நிக்கோலஸ் மதுரோ அதிபரானார். எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிட விடாமலேயே அவர் அதிபரானார். 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 2024-ல் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனாலும், மதுரோ அதனை அனுமதிக்கவில்லை. முழு சர்வாதிகாரியாக மாறியிருந்த மதுரோ மீண்டும் அதிபரானார். வெனிசுலாவில் போதைக் கும்பல்கள் ஆதிக்கம் மேலோங்கியது.
இப்படி சாவேஸுக்குப் பின்னர் தேர்தலே இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிக்கோலஸ் மதுரோ சிறைப்பிடிப்பைத்தான் வெனிசுலாவாசிகள் கொண்டாடியுள்ளனர்.
கொண்டாட்டமும் கேள்விகளும்! – ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் வாழும் வெனிசுலாவாசிகள் இந்த நகர்வைக் கொண்டாடித் தீர்த்தனர். இதற்காகத் தான் காத்திருந்தோம் என்பதுபோல் அவர்களின் கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன.
ஆனாலும் சிலர் பயத்தில் நிசப்தத்தை தழுவி நிற்கின்றனர். அடுத்து என்ன நடக்குமோ என்பதே அவர்களின் அச்சத்துக்கு காரணம் எனலாம். இப்போது வெனிசுலா மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையும், சந்தேகமும் ஒருபுறம், நிம்மதியும், நம்பிக்கையும் மறுபுறம் என்று நிலவுகிறது.
ஸ்பெயினில் களைகட்டிய மதுரோ கைது கொண்டாட்டம் பற்றி வெனிசுலாவிலிருந்து புலம்பெயர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “இங்கே நிகழும் கொண்டாட்டங்களைக் காணும்போது எனக்குக் கவலையாக இருக்கின்றது. மதுரோவை சிறைப்பிடிக்கப்பட்டதில் நிம்மதிதான். ஆனால், அடுத்து என்ன நடக்கும். போர் மூண்டால் என்னவாகும்? எனக்கு அங்கே உள்ள எனது குடும்பத்தினரின் பாதுகாப்பே முக்கியம்” என்றார்.

