யேர்மனியில் உள்ள தமிழாலயங்களின் தமிழர் திருநாள் மகிழ்வு 2026.

294 0

நன்றியைப் போற்றும் உன்னதமான தமிழர் மரபுவழித் திருநாளாக விளங்கும் தைத்திருநாளைத் தமிழ்க் கல்விக் கழக நிருவாகத்தின் கீழ் இயங்கும் தமிழாலயங்கள் தத்தம் வள வல்லமைக்கிசைவாகக் கொண்டாடி மகிழ்ந்தன. பொங்கலிடல், கலைநிகழ்வுகள் மற்றும் விளையாட்டுகள் எனத் தமிழாலயங்கள் அமைந்திருக்கும் நகரங்களின் விழாவாக வெகுசிறப்போடு முன்னெடுக்கப்பட்டன.

பொங்கல் படையலிடலோடு மட்டும் நின்றுவிடாது தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கிளித்தட்டு, உறிஅடித்தல் மற்றும் கும்மி, குலவையெனக் கூடிமகிழும் நாளாக மாணவச் செல்வங்கள் முதல் ஆசிரியர், பெற்றோர், நகர்வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து பண்பாட்டு ஆடைகளுடன் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பானை வைத்துப் பொங்கலிட்டு ஷபொங்கலோ பொங்கல்| என்று மகிழ்வுக் களிபேருவை கொண்டு ஒலியெழுப்பும்போது தாயகத்தை எம் கண்முன் நிறுத்திச் செல்வதாய் அமைகிறது. தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டுகள் ஒருபுறம் சிறக்க, மாலையிலே அரங்காற்றுகைகள் மறுபுறத்தே மகிழ்வூட்டி நின்றன. நாடகம், நடனம், கவிதை மற்றும் தாளலயம் என அரங்க நிகழ்வுகளும் களைகட்டின. பெருவெளி கடந்து தொலைதூரத்தில் இருந்தாலும் எம்மையும் தாயகத்தையும் தமிழர் திருநாளானது உணர்வுளத்தோடு இணைத்து நிற்பதையும் காணமுடிகிறது. தாயகத்தைவிட்டு வெகுதொலைவில் வாழ்ந்தாலும் தமிழினம் தனது பண்பாட்டுக் கோலங்களைப் பதிவிடுவதில் காலநிலையைக் கடந்த தம் அர்ப்;;;பணிப்பையும் தமிழ்த் தொன்மங்கள் மீதான பற்றையும் வெளிப்படுத்துவதாய் அமைந்திருந்தது. தமிழர் திருநாளில் தாயக உறவுகளையும் தம்மனங்களில் இருத்திப் பங்களிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தனர்.

தமிழ்க் கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்டுவரும் செயல்திறன் தொகுப்பான வெளிச்சவீடு தமிழர் திருநாளில் தமிழாலயமொன்றிலே வெளியிடப்படுவது வழமையாகும். இவ்வாண்டு முன்சன் தமிழாலயத்தில் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் விழாவிலே வெளியிடப்பட்டது. 2025ஆம் ஆண்டிற்கான தொகுப்பை 18.01.2026ஆம் நாளன்று பரப்புரைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க, முன்சன் தமிழாலயத்தின் நிருவாகி ஷதமிழ் மாணி| திரு. நாகராசா நிர்மலதாசன் அவர்கள் பெற்றுக்கொண்டார். 17.01.2026 மற்றும் 18.01.2026 ஆகிய இருநாள்களும் தமிழாலயங்கள் அமைந்துள்ள நகரங்களில் வாழும் தமிழர்கள், தமிழர் மரபுவழிப் பண்பாட்டு நாளினைப் பொலிவுறு மகிழ்வுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.