தைப்பொங்கல் என்பது தமிழர்களின் உழைப்பையும் இயற்கையையும் வணங்கும் பண்பாட்டு திருவிழா. சூரிய உதயத்துடன், காலை வேளையில், குடும்பம் குடும்பமாக ஒன்று கூடி பொங்கல் பொங்குவது இதன் மரபு.
அரசியல் தலைவர்களின் வருகைக்கேற்ப பொங்கல் நேரம் மாற்றப்படுவது, “பொங்கல் மக்களுக்கானதா? அல்லது அரசியல் நிகழ்ச்சிக்கானதா?
“அரிசி பொங்குவது ஒரு நம்பிக்கை;
அரசியல் பொங்குவது ஒரு கணக்கு.
இரண்டையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது” என்கின்றார்கள் யாழ்ப்பாணத்து மக்கள்.
சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சிறிலங்கா ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார்.
சூரியன் உதிக்கும் நேரத்தில் பொங்கல் பொங்கி, சூரியனுக்கு நன்றி கூறுவது தான் அதன் அடிப்படை மரபு.
இந்த அடிப்படைப் புரிதலே இல்லாமல் அரசியல் அதிகாரத்தின் பெயரில் தமிழர் கலாச்சாரத்தையே அவமதிக்கின்றார்.
கலாச்சாரம் அரசியல் மேடையாக மாறும் போது,பொங்கலை எப்போது வேண்டுமானாலும் நடத்தக்கூடிய ஒரு அரசியல் நிகழ்ச்சி போல மாற்றுவது, தமிழர் பண்பாட்டின் ஆழத்தை புரியாததின் வெளிப்பாடே.
பண்டிகை என்பது மக்களின் மனநிலையோடு தொடர்புடையது. அதை அரசியல் அட்டவணைக்குள் கட்டுப்படுத்துவது, அந்தப் பண்டிகையின் ஆன்மாவையே பாதிக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
அரசியல் தலைவர்கள் பண்டிகையில் பங்கேற்பது தவறல்ல. ஆனால், பண்டிகையின் மரபும் நேரமும் மாறக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
அடுப்பில் அரிசி பொங்கும் நாள்,
அரங்கில் அரசியல் பொங்கும் நாள்.
வாக்குறுதி வாசனையோடு
வயிறும் மனமும் சோதனைக்குள்!
அரிசி பொங்கலா?
அரசியல் பொங்கலா?
உழவன் உழைப்பின் விளைவு அரிசி பொங்கல்.
ஆனால் தேர்தல் வந்தால்
வாக்குறுதிகள் தான் அரசியல் பொங்கல்.
ஒன்று வயிறு நிறைக்கும்,
மற்றொன்று மனதை குழப்பும்.
எமக்கு தேவை
பொங்கும் உணவும், நேர்மையான ஆட்சியும்.
“பொங்கல் எம் பண்பாட்டு விழாவா? அல்லது அரசியல் அட்டவணைக்குள் அடங்க வேண்டிய நிகழ்வா?” என மக்கள் மத்தியில் விவாதம் தொடர்கிறது.
யாழ்ப்பாணப் பொங்கல்: பொங்கும் பானையா? பொங்கவைக்கப்படும் அரசியலா?
யாழ்ப்பாணத்து பொங்கல் பானையை பார்க்க விரும்பும் சிறிலங்கா ஜனாதிபதி 2021 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பொங்கப்பட்ட பொங்கு தமிழ் பற்றியும் அறிந்து கொண்டு யாழ்ப்பாணம் வருவதே நல்லது .

