அகன்ற மத்திய ஆசியா – சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வு

558 0

பூகோள மட்டத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இதனை எதிர்ப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மூலோபாயங்களை வகுத்துள்ள போதிலும் தொடர்ந்தும் சீனா தனது பூகோள அரசியல் இலக்கை அடைவதில் குறியாகவே உள்ளது.

சீனாவின் இந்த நகர்வானது ஜி20 உச்சி மாநாட்டின் போது உறுதிப்படுத்தப்பட்டது. அதாவது இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ICBM பரீட்சார்த்தத்தைக் கண்டித்து கூட்டுப் பிரகடனம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போது அதனை சீனா எதிர்த்தது.

அமெரிக்காவின் மூலோபாயக் கூட்டாளியான இந்தியா மற்றும் அமெரிக்காவின் நகர்வுகளை முறியடிக்கும் நோக்குடன் சீனாவானது பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தில் பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளதாக அண்மையில் பென்ரகன், சீனா மீது குற்றம் சுமத்தியதாக பிரதான ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் அரேபியக் கடலில் குவடார் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இது குளிர்ச்சியான நீரைக் கொண்ட ஓர் ஆழ்கடல் துறைமுகமாக விளங்குகிறது.

ஆப்கானின் எல்லையிலுள்ள தனது எல்லைப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக சீனாவானது தனது படையினரை ஆப்கானிஸ்தானின் படக்சான் மாகாணத்தில் உள்ள, வக்ஹான் மாவட்டத்தில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் பென்ரகன் வெளியிட“டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, சீனாவானது இந்தியாவைச் சூழ்ந்து கொள்ள முற்படுவதாகவும் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளதாக பென்ரகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சிறிலங்கா, பங்களாதேஸ், மியான்மார் போன்ற நாடுகளின் சில துறைமுகங்களை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் குழப்பத்தை உருவாக்க முற்படுவதாகவும் பென்ரகனின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் இக்குற்றச்சாட்டை சீன அதிகாரிகள் மறுத்திருந்தனர்.

டிஜிபோட்டியிலுள்ள தனது வெளிநாட்டு கடற்படைத் தளத்தைப் பலப்படுத்துவதற்காகவே தான் தனது படைகளை அனுப்பியுள்ளதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டில் தனது இராணுவப் பிரசன்னத்தை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் பாரியதொரு நகர்வாக இது காணப்படுகிறது.

டிஜிபோட்டியில் அமைக்கப்பட்டுள்ள சீனாவின் இராணுவத் தளமானது கண்காணிப்பு, அமைதி காப்புப் பணி, மனிதாபிமான உதவிகள் போன்ற பல்வேறு பணிகளை ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும்.

அத்துடன் இராணுவ ஒத்துழைப்பு, கூட்டுப் படை நடவடிக்கைகள், சீனாவின் வெளிநாட்டு நடவடிக்கைகள் மற்றும் அவசர மீட்புப் பணிகளைப் பாதுகாத்தல், அனைத்துலக மூலோபாய கடல்வழிப்பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்றவற்றிலும் டிஜிபோட்டியில் அமைக்கப்பட்டுள்ள சீனாவின் இராணுவத் தளம் ஈடுபடும்.

ஆபிரிக்காவிலுள்ள ஒரேயொரு நிரந்தரமான இராணுவத்தளம் அமைந்துள்ள லெமோனியர் முகாமிலிருந்து சில மைல்கள் தூரத்திலேயே சீன இராணுவப் படைகள் முகாமிட்டுள்ளனர். வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கு கடற்படைப் படகுகள் பயணிக்கும் வழியில் சீனா தனது முகாமை அமைத்துள்ளதானது இதன் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பதையே காண்பிப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இயற்கை வளங்கள் மற்றும் திறந்த புதிய சந்தைகள் போன்றவற்றை அடைவதற்கான வழிவகைகளை சீனா கண்டறிய முற்படுகிறது. இதற்காக சீனா ஆபிரிக்காக் கண்டம் முழுவதிலும் உட்கட்டுமான முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

டிஜிபோட்டி, சீனாவின் கேந்திர மையமாக விளங்குவதாலேயே இங்கு சீனா தனது வெளிநாட்டு இராணுவத் தளத்தை அமைத்துள்ளது. டிஜிபோட்டி துறைமுகமானது டிஜிபோட்டி நகரில் அமைந்துள்ளது. இது யேமனுக்குக் குறுக்காக 20 மைல்கள் தூரத்திலும் இந்தியப் பெருங்கடலின் மேற்கு எல்லையில் கடற்கொள்ளையர்களின் நடமாட்டத்தை அழிக்கக்கூடிய மையத்திலும் அமைந்துள்ளதுடன் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் கடல்வழிப்பாதைகள் ஒன்றையொன்று சந்திக்கும் மையத்திலும் இது அமைந்துள்ளதால் இது சீனாவின் மூலோபாய மையமாக விளங்குகிறது.

இதற்கும் மேலாக சீனாவானது மத்திய கிழக்கில் குறிப்பாக சிரியாவில் அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக எழும். ஏனெனில் அண்மையில் சீன-அரபு பரிமாற்ற அமைப்பும் சிரியத் தூதரகமும் இணைந்து பல நூற்றுக்கணக்கான சீன வல்லுனர்களின் உதவியுடன் உட்கட்டுமான முதலீட்டுத் திட்டமான சிரியா Day Expo  ஆரம்பித்தன. சிரியாவின் மீள்கட்டுமானத்திற்காக ஏற்கனவே ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியால் சிறியளவிலான நிதி வழங்கப்பட்டது.

அதன் பின்னர் சிரியாவில் சீனாவின் 150 கம்பனிகளுக்காக 2 பில்லியன் டொலர் முதலீட்டில் தொழிற்துறை வலயம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தை அண்மையில் சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சீனா தனது ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தை சிரியாவின் அலெப்போவிலிருந்து மெடிற்ரெறனியன் வரையும் அதன் ஊடாக ஆபிரிக்கா வரை விரிவுபடுத்த சீனா விரும்புகிறது.

இந்நிலையில் அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்தில் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் இப்பிராந்தியத்தில் சீனா மற்றும் ரஸ்யாவால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை குழிதோண்டிப் புதைப்பதற்கும் அமெரிக்காவின் மூலோபாய வல்லுனர்கள் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளதாக ஜேர்மனியின் போதைப் பொருள் – பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணி பரிந்துரைத்துள்ளது.

சுதந்திர பலுசிஸ்தானை உருவாக்குவதற்கு பலுஸ் பிரிவினைவாதிகளுக்கு அமெரிக்கா தனது பலமான ஆதரவையும் ஆயுத உதவிகளையும் வழங்க வேண்டியுள்ளது. பலுசிஸ்தான் விடுவிக்கப்பட்டு சுதந்திரமடைந்த கையோடு, சீனோ-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை மற்றும் ரஸ்யன் யூரேசியா பொருளாதார ஒன்றியம் போன்றன அழிக்கப்பட்டு விடும்.

இதற்கும் அப்பால், ஆப்கானிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானிற்கு ஊடாக பாரிய மத்திய ஆசியாவை  (Great Central Asia) உருவாக்குவதற்கு அமெரிக்கா தீவிர ஆதரவை வழங்க வேண்டும். உண்மையில் இது ஏற்கனவே இடம்பெறத் தொடங்கி விட்டது.

உஸ்பெகிஸ்தான் மற்றும் கசகஸ்தான் நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் கடந்த எட்டு மாதங்களில் காபூலுக்குப் பயணம் செய்துள்ளனர். அத்துடன் ஆப்கான் அதிபர் அஸ்ரப் கானி ஆப்கானிஸ்தானிற்கு வடக்கிலுள்ள அனைத்து அயல்நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார். ஆப்கானிற்கு குறுக்காக பாகிஸ்தான் மற்றும் இந்தியா வரையும் உஸ்பெகிஸ்தானிற்குமான  TAPI எரிவாயுக் குழாய்த் திட்டமானது துர்மெனிஸ்தானில் மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே காபூலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்டத்திட்டமானது ஆப்கானிஸ்தானில் தொடருந்துப் பாதைகளைப் புனரமைப்பதற்கான இலக்கைக் கொண்டுள்ளது.

இதேவேளை உலக வங்கியின் CASA 1000 திட்டத்தின் கீழ் கிர்கிஸ்தானிலிருந்து தஜிகிஸ்தான், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் வரை மிக விரைவில் மின்சாரம் அனுப்பபடவுள்ளது.

இப்பிராந்தியத்தில் சீனாவின் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்  என அமெரிக்கா விரும்பினால் பாரிய மத்திய ஆசியாவை அமெரிக்கா உருவாக்க வேண்டும். அத்துடன் அமெரிக்காவானது இதயசுத்தியுடன் பலுசிஸ்தானின் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். பலுசிஸ்தான் சுதந்திரமடைந்தால் அதுவே பாரிய மத்திய ஆசியா உருவாவதற்கான முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.

இதன் மூலம் பாரிய மத்திய ஆசியாவானது அரேபியக் கடலைத் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும். இதன் மூலம் சுதந்திரமான கடல் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கு அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை இப்பிராந்தியத்திற்கு அனுப்புவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான கதவு திறக்கப்படும்.

வழிமூலம்       – Eurasia review
ஆங்கிலத்தில் –  Ajmal Sohail*
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a comment