டக்ளஸ் தேவானந்தா கைது, இன விடுதலைக்கு எதிரான அரசியல் மற்றும் கண்துடைப்புச் சட்டம்!

9 0

ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்ட வரலாற்றில், டக்ளஸ் தேவானந்தா ஒரு சாதாரண அரசியல்வாதி அல்ல. அவர் தமிழர்களின் விடுதலைப் பாதையில் நின்றவர் அல்ல; மாறாக, அந்தப் பாதையைத் தடுத்து, அரசின் அடக்குமுறைகளுக்கு துணைநின்ற ஒரு அரசியல் கருவி.ஆயுதப் போராட்டத்தை நிராகரித்து, அடக்குமுறை அரசுடன் கைகோர்த்து செயல்படலாம் என்ற அவரது நிலைப்பாடு, தமிழர்களின் தன்னாட்சிக் கனவுக்கு எதிரானதாகவே இருந்தது.

“இன விடுதலை” குறித்து பேசும் போது, டக்ளஸ் தேவானந்தா தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை அல்ல, இலங்கை அரசின் ஒருமைப்பாட்டையே முன்னிறுத்தினார். போர் காலத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் EPDP அமைப்பு நெருங்கிய தொடர்பில் இருந்தது . கடத்தல், கொலை, அச்சுறுத்தல் போன்ற பல்வேறு மனித உரிமை மீறல் களை மேற்கொண்டார். இவரது அரசியல் பயணத்தின் இருண்ட பக்கங்களாக உள்ளன. ஆனால் இவை எதற்கும் இன்று வரை முழுமையான நீதிமுறை விசாரணை நடக்கவில்லை.

2001 ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவுக்கு சிறிலங்கா இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி காணாமல் போனது தொடர்பான விசாரணையின் பெயரில் அவர் 2025 டிசம்பர் 26 அன்று இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்கத்தினரால் கைது செய்யப்பட்டார் .(CID)

தனது துப்பாக்கியைச் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் ,இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுக்குப் பிறகும், கைது ஒரு சில மணி நேர செய்தியாகவே முடிந்தது. இதனால் “இந்த கைது உண்மையான நீதிக்கானதா, அல்லது ஒரு அரசியல் கண்துடைப்பா?” என்ற கேள்வி மக்களிடையே வெடித்தது.

கம்பஹ நீதிவான் நீதிமன்றத்தினால் கடந்த 09 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைதுக்குப் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எதுவும் தீவிரமாக எடுக்கப்படாதது, இந்த சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. காரணம் தெளிவாகவே உள்ளது. டக்ளஸ் தேவானந்தா அரசுக்கு தேவையான ஒரு அரசியல் முகம். தமிழர் பகுதிகளில் அரசின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி. ஆகவே அவரை உண்மையாகச் சட்டத்தின் முன் நிறுத்துவது, அரசே தன்னை குற்றவாளியாக்கிக் கொள்வதற்குச் சமம். அதனால் தான் சட்டம் இங்கே வளைந்து கொடுக்கப்படுகிறது; நீதிமுறை மௌனம் காக்கிறது.

இது ஒரு தனிநபரின் கைது பற்றிய விவகாரம் அல்ல. இது இலங்கையில் சட்டம் எப்படி தேர்ந்தெடுத்து செயல்படுகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்கள் பயங்கரவாதிகள் என சித்தரிக்கப்பட்டனர்; ஆனால் அடக்குமுறைக்கு துணைநின்றவர்கள் அமைச்சர்களாகவும் “மக்கள் பிரதிநிதிகளாகவும்” பாதுகாக்கப்பட்டனர்.

எனவே, டக்ளஸ் தேவானந்தாவின் கைது ஒரு புரட்சிகர திருப்பமாக அல்ல, தமிழர்களின் நினைவுகளை அவமதிக்கும் ஒரு கண்துடைப்புச் செயல் என்றே பார்க்கப்படுகிறது. உண்மையான நீதியும் இன விடுதலையும் வேண்டுமென்றால், இப்படிப்பட்ட அரசியல் பாதுகாப்புக் கவசங்கள் உடைக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்த மண்ணில் “நீதி” என்பது பலவீனர்களுக்கான தண்டனையாகவும், அதிகாரத்திற்கு சேவை செய்தவர்களுக்கான சலுகையாகவும் தொடர்ந்தே இருக்கும்.