முக்கிய அரசியல் சந்திப்புகளை நடத்துவதற்காக மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு நாளை மறுதினம் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வடக்குக்கு செல்லவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு சிறுபாண்மையினரின் ஆதரவைக் கோரும் முகமாக இவரின் இந்தப் பயணம் அமைகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசியுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் தலைமைத்துவத்தில் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுனயின் பிரதான அரசியல் செயற்பாட்டாளாராக பஸில் ராஜபக்ஷ காணப்படுகின்றார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் நோக்கில் புதிய கட்சிக்கான உறுப்புரிமை முதல் அனைத்துக் கட்டமைப்பையும் பஸில் ராஜபக்ஷ வலுப்படுத்தியுள்ள சூழலில் தமிழ்த் தரப்பின் ஆதரவும் இவர்களுக்குத் தேவையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு சிறுபாண்மையினரின் வாக்குகளே பிரதான காரணமாக அமைந்திருந்தது.
எனவே, சிறுபாண்மையினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் முகமாக பஸில் ராஜபக்ஷ நாளை மறுதினம் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதிவரையில் வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் மூன்று நாட்கள் தீவிர அரசியல் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளதாக எதிரணியின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது

