நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் இன்றைய தினம் இறுதி முடிவு அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு விரோதமாக கருத்து வெளியிட்டமை, மற்றும் முன்னாள் அரசாங்க காலத்து ஊழல்கள் குறித்த விசாரணைகளை தாமதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைத்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தனர்.
இந்த விடயம் குறித்து ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழுவும், நாடாளுமன்றக் குழுவும், கலந்துரையாடி இருந்த நிலையில், நேற்று மீண்டும் பிரதமர் தலைமையில் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதன்போது இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அத்துடன், அவரை பதவி விலகுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துடன், இதுதொடர்பில் அவரிடம் கோரி இருந்த விளக்கமும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இந்த விடயத்திற்கான தீர்வை அறிவிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்றையதினம் அவர் குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

