மல்லாகம் நீதிவான் நீதிமன்ற பதிவாளருக்கு எதிராக பிடியாணை!

400 0

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற பதிவாளருக்கு எதிராக அதே நீதிமன்றின் பதில் நீதிவான் திருமதி சரோஜினி இளங்கோவன்   நேற்றைய தினம்  பிடியாணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பளை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் முறையீட்டாளராக உள்ள குறித்த பதிவாளர் நேற்றை தினம் இடம்பெற்ற  வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பதிவாளரைக்  கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு பதில் நீதவான் பிடியாணை வழங்கி  உத்தரவிட்டார்.

அலைபேசி ஒன்றின் ஊடாக தன்னுடைய உத்தியோகபூர்வ தொலைபேசியில் குறித்த சட்டத்தரணி ஷர்மினி விக்னேஸ்வரன் தன்னை அச்சுறுத்தியதாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் ஆனந்தராசா நந்தினிதேவி செய்த முறைப்பாட்டின் பேரில் இவ்வழக்கு மல்லாகம் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் குறித்த சட்டத்தரணி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த தவணை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட சட்டத்தரணி குற்றச்சாட்டினை மறுத்ததை அடுத்து, வழக்கு விசாரணை நேற்றைய தினத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம்
இவ்வழக்கு நேற்றைய தினம் பதில் நீதிவான் திருமதி சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது, வழக்கின் முதலாம் சாட்சியான நீதிமன்ற பதிவாளர் நந்தினிதேவி சமூகமளித்திருக்கவில்லை.  குற்றஞ்சாட்டப்பட்டவரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், குறித்த சாட்சிக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை கையளிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.
தெல்லிப்பளை பொலீசாரின் சார்பில் ஆஜராகி இருந்த பொலீஸ் சார்ஜன்ட் பாலித, அழைப்புக் கட்டளை சாட்சியிடம் நேரில் கையளிக்கப்பட்டதாகவும், அது தொடர்பான அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிவானிடம் தெரிவித்தார்.

அழைப்புக் கட்டளை கையளிக்கப்பட்டும் குறித்த சாட்சி சமூகமளிக்காததால் அவருக்கு எதிராக பிடியாணைக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றைக் கோரினார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பதில் நீதிவான் குறித்த சாட்சியான நீதிமன்றப் பதிவாளருக்கு எதிராக பிடியாணைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்ரெம்பர்  மாதம் 11ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்கு அனுசரணையாக சட்டத்தரணிகள் கே.எஸ்.பாலகிருஷ்ணன், கே.சயந்தன் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர். –

Leave a comment