நுவரெலியா லிந்துலை மட்டுக்கலையில், தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண் (காணொளி)

576 0

நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலணி பிரிவில் மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று குறித்த சிசு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி தயா நாணயக்கார முன்னிலையில் இந்த சிசு லிந்துலை பொலிஸாரனால் தோண்டி எடுக்கப்பட்டது.

மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலணி பகுதியில் 23 வயதுடைய பெண்ணொருவர் சிசு ஒன்றை பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண்ணுக்கு அதிக குருதிப் போக்கு ஏற்பட்டதன் காரணமாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

குறித்த பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகள், சிசுவை பெற்றெடுத்தமையினால் குருதி பெருக்கு ஏற்பட்டமையை கண்டறிந்தனர்.

அத்துடன் பிறந்த சிசு உயிரிழந்த நிலையில் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக வைத்தியர்கள் நுவரெலியா பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் இருவரை கைதுசெய்துள்ளனர்.

சிசுவை பெற்றெடுத்த தாய் மற்றும் சிசுவை தோட்டத்தில் புதைக்க உதவி புரிந்த பெண் ஆகியோரையே லிந்துலை பொலிஸார் கைதுசெய்தனர்.

அத்துடன் சிசுவை தோண்டி எடுப்பதற்கு லிந்துலை மற்றும் நுவரெலியா பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்றிருந்தனர்.

அதனடிப்படையில் நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் தயா நாணயக்கார தலைமையில் சிசு புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த லிந்துலை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment