மத்திய வங்கியின் முறிவிநியோகம் ஊடாக பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனம் ஈட்டிய நிதியை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
பிணை முறி மோசடியாக சாதாரண மோசடியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அரசியல் யாப்பைத் திருத்தியோ அல்லது விசேட நீதிமன்றத்தை உருவாக்கியோ, முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் ஊழல் குற்றங்களுக்கு தண்டனை வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொதுமக்களால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டதன் பிரதான நோக்கம், ஊழல்களை இல்லாது செய்வதுடன், கடந்த காலத்தில் ஊழல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்பதே.
ஆனால் ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகள் தாமதிக்கப்படுவதாக, காவற்துறை மா அதிபர் மீதும் சட்ட மா அதிபர் திணைக்களம் மீதும் தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்தகாலத்தில் ஊழல்குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு உள்ளாக்கி தண்டனை வழங்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

