அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு எதிராக முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக இன்றையதினமும் பல்வேறு தரப்பினரால் கருத்துக்கள் வெளியாக்கப்பட்டன.
இந்த விடயம் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக விடயம் என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தொடர்பில் அந்த கட்சியினுள்ளே முறுகல்கள் நிலவுகின்றன.
கட்சித் தலைவர் செயற்குழு கூட்டம் கூடும் வரையில் பொறுத்திருக்குமாறு அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது அவர்களின் கட்சியைச் சார்ந்த பிரச்சினையாகும்.
விஜயதாஸ ராஜபக்ஷவுடன் எங்களுக்கு எந்தவித தனிப்பட்ட கோபதாபங்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் இந்த விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக, அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எங்களது கட்சிக்கு எந்தவித கருத்து முரண்பாடுகளும் இல்லை.
எனினும் இதுதொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி கூடவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது ஆழமாக கலந்துரையாடவுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர வேண்டும் என்று பேச்சுவார்த்தை மாத்திரமே நடத்தியுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் குழப்பம் அடைய வேண்டாம்.
நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஏனையவர்கள் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரகபலன் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.
நாட்டினதும், தேசிய கிரகப்பலன்கள் சிறப்பாக உள்ளன என்றும் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இதற்கு முன்னரே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னர் நான் அவரது செயற்பாடுகள், பாத்திரம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டேன்.
அந்த நேரம் எவரும் எந்தவிதம முனைப்புகளையும் காட்டவில்லை.
தற்போது அவர் தொடர்பான பிரச்சினைகள் தலைத்தூக்கியுள்ளன.
அவ்வாறானவர்களுக்கு எதிராக ஒழுக்க கோவைகள் பின்பற்றப்பட வேண்டும்.
அவர் எங்களுடன் இணைந்துள்ள போதும், அவரது மனது பிரிதொரு இடத்தில் இருக்கிறது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், விஜயதாஷ ராஜபக்ஷ முன்னெடுத்த நான்கு விடயங்கள் தொடர்பிலேயே அரசாங்கம் குழப்பமடைந்துள்ளதாக, பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பென் எமர்சனின் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானது என்று நேரடியாக அறிவித்தமை,
அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினரும் இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்று அறிவித்துள்ள போதும், இலங்கையின் 11 பேர் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டமை,
வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களும் தமிழ் அடிப்படைவாதிகளும் பௌத்த சின்னங்களை அழித்து வருகின்றமை தொடர்பில் பௌத்த தேர்தர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பை ஒழுங்கு செய்தமை
மற்றும் ஹம்பாந்தொட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டமை மிகப்பெரிய குற்றமாகும் என்று அறிவித்தமை ஆகிய நான்கு விடயங்கள் தேசிய நலன்பொருட்டு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கையாகும்.
இதற்கு எதிராகவே அரசாங்க உறுப்பினர்கள் அவர் தொடர்பில் குழப்பம் அடைந்துள்னர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஊழல் விசாரணைகள் தாமதமாகின்றமை தொடர்பில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
அது இந்த அரசாங்கம் செய்யும் பாரிய ஒரு குற்றமாகும் என்று அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
விஜயதாஸ ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியே தீர்மானிக்க வேண்டும்.
அவரை அரசாங்கத்துக்கும் அமைச்சரவைக்கும் நியமித்தது ஐக்கிய தேசிய கட்சியே.
எனவே ஐக்கிய தேசிய கட்சி இதுதொடர்பில் உரிய தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கருத்து வெளியிடும் போது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவருக்கு அரசாங்கத்தின் உறுப்பினர்களே நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவரும் உலக சாதனையை நிலைநாட்ட இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு நன்மைப் பயக்கும் வகையில் செயற்படும் அரசாங்கத்திலோ அல்லது எதிர்கட்சியிலோ அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படும் போது அவர்களுக்கு எதிராக கைஉயர்த்த நாங்கள் தயார் இல்லை.
நாட்டின் பக்கம் உள்ள எவரையும் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

