சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு 

217 0
டெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சுதந்திரதினம் நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தலைநகர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றுகிறார்.
இந்த கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் விதமாக பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
செங்கோட்டை, அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் டெல்லியின் எல்லையோர பகுதிகளில் அனைத்து பாதுகாப்பு முகமைகளும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதேபோல் பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு படையினர் எந்த நேரமும் உஷாராக இருக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சந்தைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் ஆகியவையும் கண்காணிக்கப்படுகின்றன.
டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களின் உதவியுடன் டெல்லி பொலீசார் இந்த பாதுகாப்பு பணிகளை 24 மணி நேரமும் மேற்கொண்டு வருகின்றனர்.
நகரம் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. செங்கோட்டையையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.
டெல்லி நகரம் முழுவதிலும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக கூடுதல் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அசம்பாவிதம் நடந்தால் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல டெல்லி போலீசாருக்கு கூடுதலாக 14 நவீன ரோந்து வாகனங்களும் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த வாகனங்களில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் கைதேர்ந்த அதிரடிப்படையினரும், அதிநவீன சாதனங்களும் உள்ளது, குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கான டெல்லி பொலீசாருடன் இணைந்து பாதுகாப்பில் பணியில் ஈடுபட துணை ராணுவத்தை சேர்ந்த பலநூறு வீரர்களும் டெல்லியில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சந்தேகத்துக்குரிய நடமாட்டம் மற்றும் பொருட்கள் கிடப்பது கண்டால் அதுபற்றி போலீசுக்கு தெரிவிக்கும்படியும் பொதுமக்களையும், வர்த்தக பிரமுகர்களையும் டெல்லி பொலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Leave a comment